சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (43). இவர் ஆட்டோ ஓட்டிவந்தார். இவருக்கு 13 வயதில் மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள். டிசம்பர் 3-ம் தேதி, அவருடைய 13 வயது மகளைக் காணவில்லை. பல இடங்களில் தேடிய சீனிவாசனும், அவர் மனைவியும் அன்றைய தினம் சேலையூர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரை வாங்கிய போலீஸார், மூன்று நாள்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை. மகளைக் காணாமல் மனதேவதனையில் இருந்தார் சீனிவாசன்.
மகள் குறித்த தகவல்களைக் கேட்ட தினமும் காவல் நிலையத்துக்கு சீனிவாசன் சென்றிருக்கிறார். அங்கு அவரை அவமானப்படுத்தும் வகையில் போலீஸார் பேசியிருக்கின்றனர். அதனால் மனவேதனையடைந்த சீனிவாசன், பெட்ரோலுடன் காவல் நிலையத்துக்குச் சென்றார். பிறகு காவல் நிலைய வாசலில் தீக்குளித்தார்.
அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த போலீஸார் மற்றும் பொதுமக்கள் சீனிவாசனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சீனிவாசன் உயிரிழந்தார். மகள் மாயம், கணவர் தற்கொலை என அடுத்தடுத்த சோகத்தால் அவரது மனைவி விரக்தியடைந்தார்.
சீனிவாசன் தற்கொலை செய்துகொண்டதற்கு அவரின் மகள் மாயமானதும், குடிபோதையுமே காரணம் என போலீஸார் தெரிவித்தனர். சீனிவாசனின் மரணத்துக்கு நீதிகேட்டு இந்தியன் மக்கள் மன்றத் தலைவர் வாராகி, சென்னை போலீஸ் கமிஷனருக்கும், சேலையூர் உதவி கமிஷனர் சகாதேவனுக்கும் மனு ஒன்றைக் கொடுத்தார்.
அதில் சேலையூர் இன்ஸ்பெக்டர் சீனிவாசன்தான் ஆட்டோ டிரைவரின் தற்கொலைக்குக் காரணம் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்தநிலையில், கடந்த டிசம்பர் 9-ம் தேதி சீனிவாசனின் மகளான 13 வயது சிறுமியும், அவரை அழைத்துச் சென்ற 19 வயது கல்லூரி மாணவரும், கோவை மேட்டுபாளையத்திலுள்ள விடுதியில் தங்கியிருக்கும் தகவல் சேலையூர் போலீஸாருக்குக் கிடைத்தது.
உடனடியாக போலீஸார் அங்கு சென்று சிறுமியை மீட்டனர். அப்போது இருவரும் தங்களின் கைகளை பிளேடால் அறுத்து, தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்கள். அதை போலீஸார் தடுத்து இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்தனர். பிறகு இருவரையும் சேலையூர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு இருவரிடம் போலீஸார் விசாரித்தனர்.
விசாரணையில் சிறுமியை கல்லூரி மாணவர் காதலித்ததும், திருமண ஆசைவார்த்தை கூறி மேட்டுப்பாளையத்துக்கு சிறுமியை அழைத்துச் சென்றதும் தெரியவந்தது. அதனால் சிறுமியை மீட்டு அவரது தாயிடம் போலீஸார் ஒப்படைத்தனர். 13 வயது சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்ற 19 வயது கல்லூரி மாணவரை, தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் கல்லூரி மாணவர் மீது போக்சோ சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர். காவல் நிலையத்தில் தவித்த சிறுமிக்கு போலீஸார் கவுன்சலிங் அளித்து, வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.
இது குறித்து சிறுமியின் தாயிடம் கேட்டதற்கு, ``மகளைக் காணவில்லை என்று புகார் கொடுத்ததும் போலீஸார் நடவடிக்கை எடுத்திருந்தால், என் கணவர் தற்கொலை செய்திருக்கமாட்டார். இப்போது நடுத்தெருவில் நிற்கிறோம்’’ என்று கண்ணீர்மல்கக் கூறினார்.