கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் லாக்டவுன் போடப்பட்டது. இந்தியாவில் கேரள மாநிலத்தில் தான் கொரோனா பாதிப்பு முதலில் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் வீட்டுக்குள் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர். அதைக் கடைபிடித்த பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி, கடந்த 9 மாதங்களாக வீட்டிலேயே இருந்தாராம்.

அதன் பிறகு இப்போதுதான் அவர் முதன்முறையாக வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அதாவது 275 நாட்களுக்குப் பிறகு, அவர் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அவர் கடைசியாக கடந்த மார்ச் மாதம் 5ம் தேதி, த பிரீஸ்ட் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்றாராம். அதன் பிறகு அவர் வெளியே வரவில்லையாம்.

 

மம்மூட்டி

இந்நிலையில், கொச்சியில் உள்ள தனது வீட்டில் இருந்து காரில் கிளம்பிய அவர், நேராக மெரைன் டிரைவ் சென்றாராம். பின்னர் டீ கடைக்கு சென்று நண்பர்களுடன் ஜாலியாக அரட்டை அடித்தபடி டீ குடித்துள்ளார்.

அவருடன் தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப், நடிகர் ரமேஷ் பிஷராடி, சினிமா தயாரிப்பு நிர்வாகி பாதுஷா ஆகியோரும் காரில் சென்றுள்ளனர். அவர் காரில் சுற்றிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.