வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் குழந்தை திருமணங்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. 18 வயது நிரம்பாத பெண்களை திருமணம் செய்து கொடுத்தால், மாவட்ட சமூகநலத்துறை, சைல்டுலைன் மூலம் அவர்களுக்கு ஏற்படும் உடல், மனதளவில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும் ரகசியமாக பல பகுதிகளில் குழந்தை திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெறுகிறது. சமூக நலத்துறை மற்றும் சைல்டுலைன் அதிகாரிகள், அலுவலர்களுக்கு வரும் தகவலின் அடிப்படையில் குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றன.

 

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடந்த நவம்பர் மாதம் குழந்தை திருமணம் தொடர்பாக சைல்டுலைன் (1098) அலுவலகத்துக்கு 27 அழைப்புகள் வந்தன. அதில், 17 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. 7 பேருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது. அவர்கள் குழந்தை நலக்குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டு, தற்போது பெற்றோருடன் வசித்து வருகிறார்கள். 3 குழந்தை திருமணம் தொடர்பான முகவரி சரியாக தெரிவிக்கவில்லை. அதனால் அதனை கண்டுபிடிக்க முடியவில்லை என்று சைல்டுலைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தேவேந்திரன் கூறினார்.