நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கோனேரிப்பட்டி காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 29). கூலித்தொழிலாளி. இவரது மனைவி இந்திராணி (25). இவர்களுக்கு பிரவீன்குமார் (5) என்ற மகன் இருந்தான்.

கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ந் தேதி இந்திராணி தனது 5 வயது மகன் பிரவீன்குமாருடன் அப்பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கணவர் கார்த்திக் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் இந்திராணி தனது மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக கார்த்திக், இவரது தந்தை ராஜேந்திரன் (48), தாயார் பெருமாயி (45), சித்தி சின்னபிள்ளை (40), தம்பி மணிகண்டன் (27), இவரது மனைவி ரேவதி (21) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு நாமக்கல் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம்சாட்டப்பட்ட கார்த்திக்குக்கு 5 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது. ராஜேந்திரன், பெருமாயி, மணிகண்டன், ரேவதி ஆகிய 4 பேர் மீதும் குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சின்னபிள்ளை ஏற்கனவே இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட கார்த்திக் போலீஸ் பாதுகாப்புடன் கோவை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.