புரெவி சூறாவளி முல்லைத்தீவு மற்றும் திருகோணமலைக்கு இடையில் தரையை தட்டி நேற்று (02) இரவு 8.45 மணியளவில் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

‌புரெவி சூறாவளி காரணமாக முல்லைத்தீவு பகுதியில் 224 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் ஒட்டுசுட்டான் பகுதியில் 202 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

அத்துடன் பதவி சிறிபுர பகுதியில் 199 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் உடையார்கட்டு பகுதியில் 190 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் வெலி – ஓய பகுதியில் 186 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சூறாவளியின் தாக்கத்தினால் முல்லைத்தீவில் பலத்த காற்றுடன் கூடிய கடும் மழை பெய்து வருகின்றதுடன் கனகாம்பிகைக்குளத்தின் நீர் மட்டம் 6 அடியாக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்கள் கொக்குத்தெடுவாய் மகாவித்தியாலயம், கருநாட்டுக்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை உள்ளிட்ட இடைத்தங்கல் முகாம்களில் தற்காலிக தங்கியுள்ளனர்.