தாம்பரம்: தாம்பரம் அருகே வீட்டு வேலைக்கார பெண்ணை தனி அறையில் அடைத்து பலாத்காரம் செய்ய முயன்ற டாக்டர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் இருந்து தப்பிக்க, வேலைக்கார பெண் நகை திருடியதாக நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது. மேற்கு தாம்பரம் சிடிஓ காலனி 3வது தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சந்திரா. இருவரும் மருத்துவர்கள். இவர்களது மகன் தீபக் (28). இவரும் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.
இவர்களது வீட்டில் முடிச்சூர் லட்சுமி நகரை சேர்ந்த 27 வயது இளம்பெண் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக வீட்டு வேலை செய்து வந்தார். இவரிடம், தீபக் பலமுறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால், மனமுடைந்த இளம்பெண் கடந்த 18ம் தேதி வேலையிலிருந்து நின்றுவிட்டார்.
இந்நிலையில், தனது சம்பள பாக்கியை பெற நேற்று முன்தினம் தீபக் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த தீபக் மற்றும் அவரது உறவினர் ஆனந்த் அமிர்தராஜ் (34) ஆகிய இருவரும் தனி அறையில் இளம்பெண்ணை அடைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். மேலும், தங்களது ஆசைக்கு இணங்காவிட்டால், வீட்டில் நகையை திருடி விட்டதாக காவல் நிலையத்தில் புகாரளித்து ஜெயிலுக்கு அனுப்புவோம் என மிரட்டியுள்ளனர். இதைக்கேட்டு இளம்பெண் அலறி கூச்சலிட்டுள்ளார்.
அப்போது, தீபக் தாம்பரம் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு, வீட்டில் நகை திருடிய வேலைக்கார பெண்ணை பிடித்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீசார் அங்கு வந்தபோது, இளம்பெண் ஆடை கழிந்து, உடலில் காயங்களுடன் இருந்துள்ளார். அவரிடம் விசாரித்தபோது, நடந்ததை கூறி அழுதுள்ளார். இதையடுத்து தீபக், ஆனந்த் அமிர்தராஜ் ஆகியோரிடம் தீவிரமாக விசாரித்தபோது, இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றதை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து அவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.