சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள மண்ணாதவூர் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 41).


பாஸ்ட் புட் உணவகத்தில் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கலைவாணி. இவர்களது மூத்த மகன் ரசிகரன் (17). 9-ம் வகுப்பு வரை படித்த இவர் மேலும் பள்ளிக்கு செல்லாமல் கடந்த 2 ஆண்டுகளாக ஊர் சுற்றி வந்தார். மேலும் திருட்டு உள்பட குற்றச்செயல்களிலும் ஈடுபட்டு வந்தார்.

கடந்த வாரம் மேச்சேரி பகுதியில் நடந்த சைக்கிள் திருட்டு, கோவில் உண்டியல் உடைப்பு போன்ற செயல்களில் ரசிகரனுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இதனை அறிந்த குமார் அதிர்ச்சி அடைந்தார். மேலும் மகனின் எதிர்காலத்தை நினைத்து அச்சமடைந்த குமார், மகனை அழைத்து கண்டித்தார்.

நேற்று அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த குமார் வீட்டில் இருந்த இளைய மகன் மற்றும் மனைவியை அங்கிருந்து வெளியேற்றினார்.

தொடர்ந்து ரசிகரனை பயங்கரமாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த ரசிகரன் மயங்கி விழுந்தார். பின்னர் ரசிகரனின் இரண்டு கைகளையும் கயிற்றால் கட்டி வீட்டின் உத்திரத்தில் சேலையில் தூக்கில் தொங்க விட்டார். இதில் அவர் துடித்தபடியே கிடந்தார். மனதை கல்லாக்கி கொண்ட குமார் கதவை பூட்டி விட்டு மேச்சேரி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அங்கிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் சாவியை ஒப்படைத்து விட்டு சம்பவம் குறித்து தெரிவித்தார்.

இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் ரசிகரனை மீட்டனர். ஆனால் அதற்குள் ரசிகரன் இறந்து விட்டார். அவரது உடலை மீட்ட போலீசார் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக குமாரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

எனது மகன் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதையும், அவனை பிடித்து தாக்குவதையும் சமூக வலைதளங்களின் பார்த்த நான் அவனது எதிர்காலத்தை நினைத்து அதிர்ச்சி அடைந்தேன். மேலும் அக்கம்பக்கத்தினர் எனது மகன் செயல்குறித்து அவதூறாக பேசினர். இதனால் அவமானம் தாங்க முடியாமல் ஆத்திரத்தில் அவனை சரமாரியாக தாக்கினேன். பின்னர் அவனது கைகளை பின்னால் வைத்து கட்டி வீட்டு உத்திரத்தில் சேலையில் தூக்கில் தொங்க விட்டேன். இதில் அவன் இறந்து விட்டான். ஆத்திரத்தில் இவ்வாறு செய்து விட்டேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

கைது செய்யப்பட்ட குமார் கொரோனா பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் கெரோனா பாதிப்பு இல்லை என்று அறிக்கை வந்தால் உடனடியாக சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.