பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் உள்துறை மந்திரியுமான ரகுமான் மாலிக் மீது கற்பழிப்பு புகார் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க வலைத்தள பதிவர் சிந்தியா ரிச்சி. இவர் சமீபத்தில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவைப்பற்றி அவதூறான பதிவு ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.
அந்த சர்ச்சையின் சுவடு மறைவதற்கு முன்பாக அவர் பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் உள்துறை மந்திரியுமான ரகுமான் மாலிக் மீது கற்பழிப்பு புகார் கூறி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளார்.
இது தொடர்பாக சிந்திா ரிச்சி தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:-
2011-ம் ஆண்டு பாகிஸ்தான் முன்னாள் உள்துறை மந்திரி ரகுமான் மாலிக், என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். இதை நான் மீண்டும் சொல்கிறேன். இது சரியான புகார்தான்.
பாகிஸ்தான் ஜனாதிபதி மாளிகையில், பிரதமராக இருந்த யூசுப் ராசா கிலானி தங்கி இருந்தபோது, அவரும், முன்னாள் மந்திரியான மகதூம் சகாபுதீனும் சேர்ந்து என்னை உடல் ரீதியாக கையாண்டனர்.
எனது பார்வையாளர்களாக குழந்தைகள் உள்ளிட்டோர் இருப்பதால் இன்னும் சில விவரங்களை வெளியிடாமல் தள்ளி வைக்கிறேன். அதே நேரத்தில் நடுநிலை பத்திரிகையாளர்களுடன் மேலும் விரிவாக சொல்வதில் மகிழ்ச்சி அடைவேன்.
பல ஆண்டுகளாக பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர்களிடம் இருந்து துன்புறுத்தல்களை சந்தித்து வந்துள்ளேன். எனது உயிருக்கு எண்ணற்ற அச்சுறுத்தல்கள் வந்துள்ளன. எனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இந்த வீடியோ பதிவை வெளியிடுவதற்கு முன்பாக அவர் டுவிட்டரில் ஒரு பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இழிவான உறுப்பினர்கள் தனக்கு மிரட்டல் விடுப்பதாக கூறி உள்ளார். இதற்கு தான் பல ஆண்டுகளாக பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மேலிட தலைவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டும், தாக்குதலுக்கு ஆளாகி வந்திருப்பதும்தான் காரணம் என குறிப்பிட்டுள்ளார். இதை உலகம் தெரிந்து கொள்ளக்கூடாது என நினைக்கின்றனர் எனவும் குற்றம் சாட்டி உள்ளார்.