கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகளை நடத்துவது தொடர்பாக எதிர்வரும் 10 நாட்களுக்குள் தீர்மானிக்கப்படுமென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஜீ.எல்.பீரிஸ் மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் ஏனைய சில பகுதிகளிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கின்றது.
மேலும், குறித்த பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் தரம் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியாமல் இருக்கின்றது.
ஆகவே, கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகளை நடத்துவது தொடர்பாக எதிர்வரும் 10 நாட்களுக்குள் ஆராய்ந்தே உத்தியோகபூர்வமான தீர்மானத்தை அறிவிக்க முடியும்
அதாவது, பரீட்சைகளை குறித்த தினத்திலேயே நடத்துவது என தீர்மானித்தால் சாதாரண தரத்தில் உள்ள அனைத்து பாட அலகுகளையும் உள்ளடக்குவதா அல்லது இதுவரையில் நிறைவு செய்யப்பட்டுள்ள பாட அலகுகளில் மாத்திரம் பரீட்சையை நடத்துவதா என்பது குறித்து ஆராயப்படும்.
மேலும், மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுப்படுத்துவதற்காக நாட்டிலுள்ள பாடசாலைகளுக்கு 370 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.