அமெரிக்காவில் கடந்த நவம்பர் 3ந்தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதிபரை தேர்வு செய்வதற்கு, எலக்டோரல் காலேஜ் எனப்படும் தேர்வாளர் குழுவின் 270 உறுப்பினர்களின் வாக்குகளை பெற வேண்டும். பைடன் 306 வாக்குகளும், நடப்பு அதிபரான டொனால்டு டிரம்ப் 232 வாக்குகளும் பெற்றனர்.
ஆனால் டொனால்டு டிரம்ப் ஜனநாயக கட்சியின் வெற்றியை ஒப்புக்கொள்ளாமல் தொடர் குற்றசாட்டுகளை முன் வைத்து வருகிறார். பரவலான தேர்தல் மோசடி குறித்த ஆதாரமற்ற கூற்றுக்களை முன்வைத்து, தேர்தலை ஒப்புக்கொள்ள அதிபர் டிரம்ப் மறுத்துவிட்டார்.
இந்த நிலையில், பைடன் அதிபர் என தேர்வாளர் குழு சான்றளித்து விட்டால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவீர்களா? என நிருபர் ஒருவர் டிரம்பிடம் கேள்வி எழுப்பினார்.
அதிபர் தேர்தலில் பைடனிடம் தோல்வி அடைந்த பின் டிரம்ப் முதன்முறையாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசியுள்ளார் டிரம்ப்.
நிருபரின் இந்த கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், ‘வெற்றியாளரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் நிச்சயம் நான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன். அது உங்களுக்கும் தெரியும். ஆனால் வருகிற ஜனவரி 20ந்தேதி வரை பல்வேறு விசயங்கள் நடைபெறும் என நான் நினைக்கிறேன். பெரிய அளவில் நடந்த முறைகேடுகள் கண்டறியப்பட்டு உள்ளன’ என கூறியுள்ளார்.
அமெரிக்காவில் எலக்டோரல் காலேஜ் என்பது அதிபரை தேர்வு செய்யக்கூடிய தேர்வாளர்களை கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழுவினர் அளிக்கும் ஓட்டுகளுக்கு ஏற்ப பெரும்பான்மை வாக்குகளை பெறும் அதிபர் வேட்பாளர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.
இதுபற்றி டிரம்ப் கூறும்பொழுது, வாக்களிக்கும் உள்கட்டமைப்பில் நாம் 3வது உலக நாடு போல் இருக்கிறோம். ஹேக்கிங் செய்ய கூடிய கணினி சாதனங்களை நாம் உபயோகப்படுத்தி கொண்டிருக்கிறோம் என கூறினார்.
அதிபராக பைடனை எலக்டோரல் காலேஜ் தேர்வு செய்கிறதென்றால், அது பெரிய தவறாகி விடும் என கூறிய டிரம்ப், இந்த தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது, உயர்மட்ட அளவில் மோசடிகள் நடந்துள்ளன என கூறியுள்ளார்.
புதிய அதிபர் யார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்காக, வரும் டிசம்பர் 14ம் தேதி தேர்வாளர் குழு கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.