டெங்கு, மலேரியா, கொரோனா மற்றும் ராஜநாகத்திடம் கடி வாங்கிய நபர் இத்தனை பாதிப்பில் இருந்தும் உயிர்தப்பியுள்ளார்.
இங்கிலாந்து நாட்டின் ஐஸ்லி ஆப் வெயிட் தீவுப்பகுதியை சேர்ந்தவர் இயன் ஜோன்ஸ். இவர் இந்தியாவில் தங்கி ஏழைமக்களுக்கு தனது தொண்டு நிறுனம் சார்பில் உதவிகளை செய்து வருகிறார்.
இதற்கிடையில், இவர் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் தங்கி தொண்டு பணிகளை செய்து வருகிறார். இவருக்கு டெங்கு, மலேரியா உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அந்த பாதிப்பில் இருந்து அவர் குணமடைந்துள்ளார்.
மேலும், உலகையே உலுக்கி வரும் கொரோனாவுக்கும் இவர் இலக்காகியுள்ளார். இயன் ஜோன்ஸ்க்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு உறுதியாகி பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று குணமடைந்துள்ளார்.
இந்நிலையில், இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜோதாபூர் மாவட்டத்தில் தங்கி ஒரு வீட்டில் ஜோன்ஸ் தங்கி இருக்கிறார். அவர் வீட்டின் பின்பகுதியில் கடந்த வாரம் நின்றுகொண்டிருந்தபோது கொடிய விஷம் கொண்ட ராஜநாகம் இரண்டு முறை கடித்துள்ளது.
இதையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜோதாபூர் மாவட்ட மருத்துவமனையில் ஜோன்ஸ் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஜோன்சுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
சிகிச்சையை தொடர்ந்து ராஜநாகம் கடியில் இருந்து ஜோன்ஸ் மீண்டுள்ளார். ஆனால், அவரின் உடல் செயல்பாடுகள் குறைந்துள்ளதாகவும், பார்வை திறன் குறைந்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், இது தற்காலிகமான ஒன்றுதான் அவரின் உடல்நிலை இன்னும் சில நாட்களில் இயல்பு நிலைக்கு திரும்பும் என தெரிவித்துள்ளனர்.
பாம்பு கடி பாதிப்பில் இருந்து குணமடைந்ததையடுத்து, ஜோன்ஸ் தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். டெங்கு, மலேரியா, கொரோனா வைரஸ் மற்றும் ராஜநாகம் கடி என 4 கண்டத்தில் இருந்து தப்பித்து இயன் ஜோன்ஸ் நம்பிக்கையின் வாழ்கையை நகர்த்திக்கொண்டு செல்கிறார்.