அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் விளந்தை கிராமம் தட்டாரத்தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன்கள் பிரபுவேல்(வயது 20), சிவராமன்(17). இதில் பிரபுவேல் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் ‘டி பார்ம்’ மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர்கள் 2 பேரும் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு மீண்டும் ஆண்டிமடத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பிரபுவேல் ஓட்டினார். கவரப்பாளையம் கிராமம் அருகே வந்தபோது முன்னால் சென்ற தனியார் பஸ்சை முந்திச் செல்ல முயன்றார். அப்போது எதிரே வந்த சரக்கு வேனும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் பிரபுவேல், சிவராமன் ஆகியோர் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் பிரபுவேலுக்கு தலையில் பலத்த அடி ஏற்பட்டது. சிவராமனுக்கு காலில் அடிபட்டது.
அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பிரபுவேலுக்கு தலையில் பலத்த அடிபட்டதால், அவரை மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு டாக்டர்கள் அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே பிரபுவேல் பரிதாபமாக உயிரிழந்தார். சிவராமனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிந்து சரக்கு வேனை ஓட்டி வந்த மதுரை பகுதியை சேர்ந்த தினேஷ்குமாரை(27) கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.