ஆபத்து நம்மை சூழும் நேரத்தில் மிகவும் தைரியமாக நமக்கு உதவி செய்ய வருபவரை சிறந்த வீரர் என்று போற்றி புகழ்வோம். அந்த வகையில் கொரோனா எனும் பெருந்தொற்று உலக மக்கள் அனைவருக்கும் உயிர் பயத்தை காண்பித்து வரும் வேளையில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோர் நம்மை காப்பாற்றும் சிறந்த வீரர்களாக திகழ்கின்றனர். இதன் காரணமாகத்தான் அவர்கள் "Frontline Warriors" என அழைக்கப்படுகின்றனர். 

அதுபோல கடந்த நவம்பர் 16ம் தேதி இமாச்சல் பிரதேசத்தில் நடந்த ஒரு சம்பவத்தில், ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர், பனியால் சூழப்பட்ட லஹவுள் பள்ளத்தாக்கிலிருந்து மோசமான நிலையில் இருந்த இரண்டு கொரோனா நோயாளிகளை மண்டியில் உள்ள நேர் சவுக் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். கடும் சிரத்தை எடுத்து நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்த இரு ஊழியர்களும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும்  பெற்று வருகின்றனர். 

இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியான செய்தியில், ‘ஆம்புலன்ஸ் ஊழியர்களான மனோஜ் மற்றும் அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர் ஜெய் லலிதா ஆகியோர் மோசமாக பாதிக்கப்பட்ட இரண்டு கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல தங்கள் உயிரைப் பணயம் வைத்துள்ளனர். இமாச்சலில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக மணாலி - அடல் டன்னல் - கீலாங் நெடுஞ்சாலை முழுவதும் பனியால் மூடப்பட்டிருந்தது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருந்தது. 


இந்த நிலையில் கீலாங்கில் கொரோனவால் மோசமாக பாதிக்கப்பவர்கள் குறித்து மருத்துவர்கள் தெரிவித்த பின்னர் இரண்டு நோயாளிகளையும் விரைவாக நேர் சவுக்கில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல வேண்டியிருந்தது. அவர்களை அழைத்து வரும் பணியை 108 தேசிய ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மேற்கொள்ள வேண்டியிருந்தது. அவர்கள் சுரங்கப்பாதையை அடைந்ததும், சோலாங் பள்ளத்தாக்கை அடைய 30 முதல் 45 செ.மீ தடிமனான பனியுடன் 13 கி.மீ தூரத்தைக் கடக்க வேண்டியிருந்தது. ஆனால் ஆம்புலன்ஸ் ஒரு தடிமனான பனியால் மூடப்பட்டிருக்கும் மேற்பரப்பில் இயங்கும் அளவிற்கு வடிவமைக்கப்படவில்லை.