குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் (25 வயது) இளம்பெண். இவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் 38 வயது வாலிபர் கூலிவேலை செய்து வருகிறார்.
அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இளம்பெண்ணின் தாயார் குளிப்பதை மறைந்திருந்து வீடியோ எடுத்துள்ளார்.
பின்னர் அதை இளம்பெண்ணிடம் காட்டி, இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பிவிடுவேன் என மிரட்டி இளம்பெண்ணை அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
6 ஆண்டுகளாக தொடர்ந்து மிரட்டி பலாத்காரம் செய்து சித்ரவதை செய்துள்ளார். மேலும் அடிக்கடி மிரட்டி பணம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து அவர் இளம்பெண்ணையும், அவரது குடும்பத்தினரையும் மிரட்டி வந்துள்ளார். இதனால் பயந்துபோன இளம்பெண் இதுகுறித்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமாரிடம் புகார் அளித்தார்.
அவரது உத்தரவின்பேரில் குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர்.
இளம்பெண்ணின் குடும்பத்தினர் இரும்பு கம்பியால் தாக்கியதாகவும், இதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்றதாகவும், குடியாத்தம் டவுன் போலீசில் வாலிபர் புகார் அளித்தார்.
அதேபோன்று தங்களை கத்தியால் வெட்டியதாக இளம்பெண்ணின் குடும்பத்தினர் வாலிபர் மீது புகார் அளித்தனர்.
இந்த புகார்களின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.