புதுவை காந்திதிருநல்லூரை சேர்ந்தவர் அஜித் என்ற கட்ட அஜித் (வயது 22). பெயிண்டரான இவர் கடந்த 15-ந்தேதி இரவு சாணரப்பேட்டை சுடுகாடு அருகே மர்ம கும்பலால் வெட்டிக்கொல்லப்பட்டார்.

போலீசாரின் விசாரணையில் கடந்த 2017-ம் ஆண்டு முத்திரையர்பாளையத்தை சேர்ந்த ஞானசேகர், காந்தி திருநல்லூர் சதீஷ், சண்முகாபுரம் ஜெரால்டு ஆகிய ரவுடிகள் கொலை செய்யப்பட்ட வழக்கிற்கும் இந்த வழக்கிற்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதாவது ஏற்கனவே கொலை செய்யப்பட்ட சதீஷ் என்பவர் அஜித்தின் உறவினர் ஆவார்.

அவரை கொலை செய்தவர்களை பழிவாங்குவேன் என்று அஜித் தனது நண்பர்கள் சிலரிடம் கூறியுள்ளார். அது 3 பேர் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய சாணரப்பேட்டை சூர்யா, சண்முகாபுரம் நந்தகுமார் ஆகியோருக்கு தெரியவந்தது. அவர்கள் இருவரும் அஜித் தங்களை கொல்லும் முன்பு தாங்கள் முந்திக்கொள்வது என்று திட்டமிட்டனர். அதன்படி தங்களது நண்பர்களான 16 வயது சிறுவன் மற்றும் கவுண்டன்பாளையம் சதீஷ்குமார் ஆகியோருடன் சேர்ந்து அஜித்தை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து சிறுவன் உள்பட 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.