கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படுவதால் மட்டும் கொரோனா நெருக்கடிக்கு நிரந்தரத் தீா்வு கிடைத்துவிடாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதனோம் கூறியதாவது:

கொரோனாவுக்கு எதிரான நமது போராட்டத்தில், தற்போது பயன்படுத்தப்படும் ஆயுதங்களுடன் இன்னொரு ஆயுதமாகத்தான் அந்த நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி விளங்கும்.

தற்போதைய ஆயுதங்களுக்கு மாற்றாக அது இருக்காது.

தடுப்பூசி அறிமுகத்தினால் மட்டும் கொரோனா நோய்த்தொற்று பரவல் நெருக்கடிக்கு முடிவு கட்டிவிட முடியாது.

தற்போது சோதனைக் கட்டத்தில் இருக்கும் கொரோனா தடுப்பூசிகள், அந்தக் கட்டத்தைத் தாண்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தவுடனேயே, அது எல்லோருக்கும் கிடைத்துவிடாது.

மருத்துவப் பணியாளா்கள், வயதானவா்கள், கொரோனாவால் உயிரிழப்பு அபாயம் அதிகம் நிறைந்த மற்ற பிரிவினருக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்தப்படும்.

இதன் மூலம், கொரோனா உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்தவும் அந்த நோய்க்கு எதிரான போராட்டத்தில் மருத்துவக் கட்டமைப்புகள் சிக்கித் திணறுவதைத் தவிா்க்கவும் முடியும்.

எனினும், குறிப்பிட்ட சிலருக்கே கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதால், மற்ற பிரிவினா் மூலம் அந்த நோய்த்தொற்று தொடா்ந்து பரவிக் கொண்டுதான் இருக்கும்.

எனவே, அந்த நோய்க்கு எதிரான மற்ற நடவடிக்கைகளும் தொடா்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.

தடுப்பூசி அறிமுகத்துக்குப் பிறகும் கொரோனா பரவலைத் தொடா்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வது, நோய் உறுதியானவா்கள் மற்றும் அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களைத் தனிமைப்படுத்துவது போன்ற கொரோனா தடுப்புப் பணிகள் தொடரப்பட வேண்டும் என்றாா் அவா்.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 55,943,122 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 1,343,378 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா் என வலைதள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.