உலக மக்கள் தொகையில் 10 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்கே கொரோனா வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன், “உலக மக்கள் தொகையில் 10 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்கே கொரோனாவுக்கு எதிரான ‘ஆன்டிபாடி’ எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.
அதிக மக்கள் நெரிசல் மிகுந்த நகர்ப்புறங்களில், சில இடங்களில் 50 முதல் 60 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் உருவாகியுள்ளது.
ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தி உருவாகுவதற்கு தடுப்பூசி ஏற்றப்படுவதுதான் ஒரே வழி. தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள், கொரோனாவால் ஏற்படும் மரணம், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நிலை ஆகியவற்றில் இருந்து நல்ல பாதுகாப்பை அளிக்கின்றன.
அதே சமயத்தில், அறிகுறி இல்லாத கொரோனா பாதிப்பு, லேசான பாதிப்பு ஆகியவற்றுக்கு எதிராக தடுப்பூசி உறுதியுடன் செயற்படுவது குறித்து ஆய்வு நடந்து வருகிறது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.