அமீரகத்தில் செயல்பட்டு வரும் எதிகாத் தேசிய ரெயில்வே திட்டம் கடந்த 2009-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதில் தற்போது சரக்கு ரெயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. முதலாவதாக செயல்படுத்தப்பட்ட ரெயில்வே திட்டத்தில் 264 கி.மீ. தொலைவுக்கு தண்டவாளம் அமைக்கப்பட்டு சரக்கு ரெயில் போக்குவரத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 


தற்போது ரெயில்வே போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரியாக அமீரகத்தை சேர்ந்த மைதா அல் ரெமைதி (வயது 29) என்ற பெண் பணியாற்றி வருகிறார். ரெயில்வே போக்குவரத்து கட்டுப்பாட்டு துறையில் இவர் 3 ஆண்டு பணியில் 5 ஆயிரத்து 500 பணி நேரத்தை நிறைவு செய்துள்ளார். இந்த பணி குறித்து அவர் கூறியதாவது:-

ரெயில்வே டெப்போ இருக்கும் மிர்பா கிராம பகுதி அருகேதான் எனது குடியிருப்பு உள்ளது. என்னிடம் பலர் இந்த துறையில் எப்படி பணியாற்றுகிறீர்கள்? என்பது போன்ற பல கேள்விகளை கேட்டு வருகின்றனர். உண்மையில் அமீரகத்தை சேர்ந்த பெண்ணாக கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிவது பெருமையாகவும், அதிகாரமிக்கதாகவும் உணர வைத்துள்ளது.

வளர்ச்சியடைந்து வரும் இந்த புதிய துறையில் பணியாற்றுவதன் மூலம் நாட்டின் முன்னேற்ற பாதையில் சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவே நினைக்கிறேன். மக்களிடையே இருந்து கிடைக்கும் கருத்துகள், விமர்சனங்கள் என்னை அடுத்து என்ன செய்ய வேண்டும்? என்பதை தூண்டுவதாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.