அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தற்போதையை அதிபர் டொனால்டு ட்ரம்ப் தோல்வியுற்றார். ஆனால், தேர்தலில் விதிமீறல்கள் நடந்ததாகவும், வாக்கு எண்ணிக்கையின்போது பல்வேறு இடங்களில் குளறுபடிகள் ஏற்பட்டதாகவும் ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகிறார்.

இந்நிலையில், தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை முன்பு, ட்ரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். அப்போது, விர்ஜினியாவில் உள்ள கோல்ஃப் மைதானத்திற்கு சாலை மார்க்கமாக ட்ரம்ப் புறப்பட்டார். ஆதரவாளர்களுக்கு மத்தியில் கார் ஊர்ந்து சென்றது. இதையடுத்து, ’மில்லியன் மெகா பேரணி’ (Million MAGA March) என்ற பெயரில், தங்கள் ஆதரவைத் தெரிவிக்கும் வகையிலும், "மீண்டும் ட்ரம்ப் ஆட்சி வேண்டும்" என்று முழக்கமிட்டவாறு ஆயிரக்கணக்கானோர் கொடியேந்திச் சென்றனர்.

மேலும், வாக்குகளைத் திருடுவதை நிறுத்துங்கள், இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு ட்ரம்பின் ஆட்சியை விரும்புகிறோம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியாறு அவரது ஆதரவாளர்கள் பேரணியாகச் சென்றனர். பேரணியின்போது, ட்ரம்ப் ஆதரவு அமைப்பான, 'ப்ரவுட் பாய்ஸ்'-க்கும், எதிர் அமைப்பான 'ப்ளாக் லைவ்ஸ் மேட்டர்' அமைப்புக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது, ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டதால் வன்முறை வெடித்தது.


இதையடுத்து, போலீசார் தடியடி நடத்தி வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கலைந்துபோகச் செய்தனர். ட்ரம்புக்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததால், வாஷிங்டனில் நகரமே போர்க்களமாக மாறியது. இருப்பினும், போலீசார் துரிதமாக செயல்பட்டு போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்ததால் இயல்புநிலை திரும்பியது.