அமெரிக்க அதிபராக தேர்வாகி இருக்கும் ஜோ பைடன் தனது நிர்வாக பணிகளுக்கான குழுவை கட்டமைக்கும் பணிகளை துவங்கி உள்ளார். முன்னதாக வெள்ளை மாளிகையின் பணியாளர் குழு தலைவராக ரான் கிளைனை ஜோ பைடன் தேர்வு செய்தார்.
இந்நிலையில், ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் அருகில் இந்திய வம்சாவெளியை சேர்ந்த நபர் நிற்கும் புகைப்படம் சமூ வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் புகைப்படத்தில் இருப்பது இந்திய வம்சாவெளியை சேர்ந்த அகமது கான் என்றும் இவர் ஜோ பைடனின் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், ஜோ பைடன் அரசியல் ஆலோசகர் பற்றிய தகவலில் துளியும் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. மேலும் புகைப்படத்தில் இருப்பது உண்மையில் இந்திய வம்சாவெளியை சேர்ந்த அகமது கான் தான். எனினும், இவர் பைடனின் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்படவில்லை.
உண்மையில் அகமது கான் 2016 ஆண்டில் ஜோ பைடனின் அமைத்த அரசியல் குழுவின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டார். வைரல் புகைப்படம் 2015 ஆண்டு வாக்கில் எடுக்கப்பட்டது ஆகும். இதே புகைப்படங்கள் அடங்கிய பல்வேறு செய்தி தொகுப்புகள் இணையத்தில் கிடைக்கின்றன.
அந்த வகையில் ஜோ பைடன் அரசியல் ஆலோசகராக இந்திய வம்சாவெளியை சேர்ந்த அகமது கான் நியமிக்கப்படவில்லை என்பது உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.