உலக சர்க்கரை நோய் தினம் நவம்பர் 14ஆம் திகதி அனுசரிக்கப்படும் நிலையில், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த வெந்தய நீர், இலவங்கப்பட்டை நீர் மற்றும் பாகற்காய் சாறு போன்ற இயற்கை பானங்கள் உண்மையில் உதவுமா என்பது தொடர்பில் மருத்துவ நிபுணர் முக்கிய விளக்கமொன்றை வழங்கியுள்ளார்.

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதற்காக பலரும் காலையில் வெறும் வயிற்றில் வெந்தய நீர், பட்டை நீர் மற்றும் பாகற்காய் சாறு குடிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். இவை இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் என்ற நம்பிக்கையும் மக்கள் மத்தியில் காணப்படுகிறது.

இது தொடர்பில் சென்னை கிளெனீகிள்ஸ் மருத்துவமனையின் உள் மருத்துவ ஆலோசகரும் நீரிழிவு நோய் நிபுணருமான டாக்டர் அனிருத்தா சீனிவாசன் விளக்கமளித்துள்ளார்.

1. வெந்தயத் தண்ணீர்

வெந்தயத்தில் காணப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து, உணவில் உள்ள மாவுச்சத்து உடலில் உறிஞ்சப்படுவதை மெதுவாக்க உதவுகிறது. சில ஆய்வுகளில் வெந்தயத்தைப் பயன்படுத்தியவர்களின் இரத்தச் சர்க்கரை மற்றும் HbA1c அளவுகளில் குறைவு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், வெந்தயத்தை ஊறவைத்த தண்ணீரை மட்டும் குடிப்பதால் இதே பலன் கிடைக்கும் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை.

2. இலவங்கப்பட்டைத் தண்ணீர்

இலவங்கப்பட்டை உடலில் இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தி இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவக்கூடும் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆனால், இதன் பலன்கள் தொடர்பான ஆய்வு முடிவுகள் ஒரே மாதிரியாக இல்லை. மேலும், இலவங்கப்பட்டையை அதிக அளவில் நீண்ட காலம் உட்கொள்வது கல்லீரலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவர் எச்சரித்துள்ளார்.

3. பாகற்காய் சாறு

பாகற்காயில் காணப்படும் சில இயற்கையான சேர்மங்கள் உடலில் குளுக்கோஸ் பயன்படுத்தப்படும் முறையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், பாகற்காய் சாறு குடிப்பதால் சர்க்கரை நோய் முழுமையாகக் கட்டுப்படும் என்பதற்கு போதுமான அறிவியல் ஆதாரங்கள் இல்லை. குறிப்பாக, சர்க்கரை நோய்க்கான மருந்துகள் அல்லது இன்சுலின் எடுத்துக்கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்ற பின்னரே இதனைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.

வெறும் வயிற்றில் குடித்தால் அதிக பலன் கிடைக்குமா?

காலையில் வெறும் வயிற்றில் இந்தப் பானங்களைக் குடிப்பதால் இரத்தச் சர்க்கரை அளவு அதிகமாகக் குறையும் என்பதற்கு வலுவான மருத்துவ ஆதாரங்கள் இல்லை என மருத்துவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தப் பானங்கள் எதுவும் மருத்துவர் பரிந்துரைக்கும் சர்க்கரை நோய் மருந்துகளுக்கு மாற்றாகாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க சத்தான உணவுப் பழக்கம், தினசரி உடற்பயிற்சி, போதுமான தூக்கம், உடல் எடையைக் கட்டுப்படுத்துதல் மற்றும் முறையான மருத்துவப் பரிசோதனைகள் அவசியம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய எச்சரிக்கை: இயற்கையான பானங்கள் என்பதற்காக அவற்றை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தக் கூடாது. மருத்துவரின் ஆலோசனையின்றி சர்க்கரை நோய் மருந்துகளை நிறுத்தவோ, அளவைக் குறைக்கவோ கூடாது.