ஆடிக் கார்த்திகை விரதம் என்பது என்ன கேட்டாலும், எந்த வரத்தை தரக் கூடிய அற்புதமான விரத நாளாகும். அதனால் இந்த நாளில் பலரும் முருகப் பெருமானுக்கு விரதம் இருந்து வழிபடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
ஆடிக் கிருத்திகை அன்று எந்த நாளில், எந்த நேரத்தில், எந்த முறையில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டால் வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இந்த ஆண்டு ஆடிக்கிருத்திகை ஜூலை 29 மற்றும் 30 ஆகிய இரண்டு நாட்களும் உள்ளது. இந்த நாளில் எந்த நாளில், எப்படி விரதத்தை துவக்கி, எப்போது நிறைவு செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஜூலை 29ம் திகதி பகல் 02.41 மணிக்கு துவங்கி, ஜூலை 30ம் திகதி பகல் 01.40 வரை கிருத்திகை நட்சத்திரம் உள்ளது.
பொதுவாக கிருத்திகை விரதத்தை பரணியில் துவங்கி, கிருத்திகையில் நிறைவு செய்வது தான் வழக்கம். அப்படி பரணியுடன் சேர்த்து கார்த்திகை விரதம் இருப்பவர்கள் ஜூலை 29ம் திகதி காலையிலேயே விரதத்தை துவக்கி விடலாம்.
அன்று காலை உணவு ஏதும் சாப்பிடாமல், பகல் மற்றும் இரவில் எளிமையான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். ஜூலை 30ம் திகதி காலை மற்றும் பகலில் உபவாசமாக இருந்து, மாலையில் விளக்கேற்றி வழிபட்ட பிறகு விரதத்தை நிறைவு செய்யலாம்.
இரண்டு நாட்கள் விரதம் இருக்க முடியாது என்பவர்கள் ஜூலை 30ம் திகதி, முருகப் பெருமானுக்குரிய செவ்வாய்கிழமையுடன் சேர்ந்து வரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று காலை மற்றும் பகலில் உபவாசமாக இருந்து, மாலையில் விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம்.
சிலருக்கு கார்த்திகைக்கு இலை போட்டு படைக்கும் வழக்கம் இருக்கும். அவர்கள் ஜூலை 30ம் திகதி காலை மட்டும் உபவாசமாக இருந்து, பகலில் படையல் போட்டு வழிபட்ட பிறகு, விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம்.
ஆடிக் கிருத்திகை அன்று முருகப் பெருமானுக்கு பால், பழம், பஞ்சாமிர்தம், தேன் கலந்த திணை மாவு போன்றவை நைவேத்தியமாக படைத்து வழிபடலாம். முருகப் பெருமானுக்கு எது படைத்தாலும் தேன் கலந்து வைத்து, படைப்பது மிக உயர்வான பலன்களை தரும்.
அன்றைய தினம் வீட்டில் சட்கோண தீபம் ஏற்றி, ஆறு அகல் விளக்குகளில் நெய் விட்டு தீபம் ஏற்றி வழிபடலாம். முருகப் பெருமானுக்குரிய திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி, வேல்மாறல், வேல் விருத்தம் போன்றவை பாடி வழிபடலாம்.
வேல் வைத்து வழிபடுபவர்கள், வேலுக்கு பூஜை செய்து வழிபடலாம். ஆடிக் கார்த்திகை அன்று முருகப் பெருமானுக்கு கோவிலில் நடக்கும் அபிஷேகத்திற்கு பால் வாங்கிக் கொடுப்பதும் முருகனின் மனதை குளிர வைக்கும்.