ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான கருப்பு திரைப்படம், தமிழ் நாட்டுப்புறக் கதைகளையும் நம்பிக்கைகளையும் அடிப்படையாகக் கொண்ட ஃபேண்டஸி ஆக்ஷன் டிராமா. இதற்கு முன்பு நகைச்சுவை மற்றும் நையாண்டி படங்களுக்காக அறியப்பட்டவர் ஆர்.ஜே. பாலாஜி.
தமிழ் சினிமாவில் 2026-ம் ஆண்டு நடிகர் சூர்யாவுக்கு முக்கியமான ஆண்டாக அமைந்துள்ளது. அவர் நடிப்பில் வெளியான கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ், சீன் ஆகிய மூன்று படங்களும் தொடர்ந்து ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றுள்ளன. மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவான கிரைம் காமெடி திரைப்படமான சீன், வெளியான மூன்றே நாட்களில் உலகம் முழுவதும் ரூ.117 கோடியை வசூலித்துள்ளது. இதன் மூலம் ஒரே ஆண்டில் தொடர்ந்து மூன்று படங்கள் ரூ.100 கோடி வசூலைக் கடந்து புதிய சாதனையை சூர்யா படைத்துள்ளார். இதற்கு முன்பு வெளியான கருப்பு திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.310 கோடியையும், விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரூ.209 கோடியையும் வசூலித்தன. சமீபத்திய ஆண்டுகளில் ஒரே காலண்டர் ஆண்டில் மூன்று படங்களின் தொடக்க வார இறுதி வசூலும் ரூ.100 கோடியைக் கடந்த சாதனையை எந்தத் தமிழ் நடிகரும் நிகழ்த்தியதில்லை. ஆனால், இந்த வசூல் சாதனையைவிட சூர்யா இந்த இடத்தை அடைந்த விதம்தான் கவனிக்க வேண்டிய விஷயம்.
வீழ்ச்சியைச் சந்தித்த காலம்
சூரரைப் போற்று படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றதுடன், ஜெய் பீம் படத்திலும் நடிப்பால் அனைவரது பாராட்டுகளையும் பெற்றார் சூர்யா. கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்த இரண்டு படங்களும் அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக வெளியிடப்பட்டதால், திரையரங்குகளில் முறையான வெளியீட்டைப் பெறவில்லை.
இதையடுத்து மீண்டும் திரையரங்குகளுக்குத் திரும்பிய சூர்யா, தனது முந்தைய காலகட்டத்தில் பின்பற்றி வந்த வழக்கமான திரைப்பட பாணிக்குத் திரும்பப் போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தார். முதல் வார இறுதியில் வசூலைப் பெற்றுத் தரக்கூடிய மாஸ் ஹீரோ கதாபாத்திரங்களில் மீண்டும் நடிக்க விரும்பவில்லை. ஒரு நடிகராக தனக்கு புதிய அனுபவத்தைத் தரக்கூடிய இயக்குநர்கள், வழக்கத்திற்கு மாறான கதைகள், இதுவரை ஏற்று நடித்திராத கதாபாத்திரங்கள் ஆகியவற்றைத் தேர்வு செய்ய விரும்பினார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
ஆனால், அதன் முடிவுகள் அவருக்குச் சாதகமாக அமையவில்லை.
சிவா இயக்கத்தில் உருவான கங்குவா திரைப்படம், திரையரங்குகளில் சூர்யாவை மீண்டும் வெற்றிப் பாதைக்குக் கொண்டுவருவதுடன், இந்திய அளவில் அவருக்கான சந்தையை விரிவுபடுத்தும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படத்தின் திரைக்கதை மற்றும் கதை சொல்லும் விதம் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தன. அதே நேரத்தில் சூர்யாவின் நடிப்புக்கும், படத்தின் காட்சியமைப்புக்கும் பாராட்டுகள் கிடைத்தன. இருப்பினும், படத்தின் பட்ஜெட்டுடன் ஒப்பிடும்போது கிடைத்த வசூல் பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
படம் தொடர்பாக இணையத்தில் எழுந்த கேலிகளுக்கும் விமர்சனங்களுக்கும் நடிகை ஜோதிகா வெளிப்படையாகப் பதிலளித்தார். படத்துக்கு எதிரான விமர்சனங்களை ஒரு வகையான 'பிரசாரம்' என்று குறிப்பிட்டு படத்துக்கு ஆதரவாகப் பேசினார். ஆனால், வசூல் நிலவரம் வேறு கதையைச் சொன்னது.
கங்குவா தோல்விக்குப் பிறகு, 2025-ம் ஆண்டு மே மாதம் வெளியான ரெட்ரோ திரைப்படம் இன்னும் சிக்கலான சூழலை உருவாக்கியது. தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூர்யா இரட்டை வேடங்களில் நடித்தார். காதல் கதையையும் போர் பின்னணியையும் இணைத்துப் படமாக உருவாக்கியிருந்தார்.
கங்குவாவின் தோல்விக்கும் ரெட்ரோ படத்துக்குக் கிடைத்த கலவையான விமர்சனங்களுக்கும் இடையில், சூர்யாவின் திரையுலக மதிப்பில் ஒரு பாதிப்பு ஏற்பட்டது. அவரது நடிப்புத் திறனிலோ, புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் ஆர்வத்திலோ எந்தக் குறையும் இல்லை. ஆனால், வணிக ரீதியாக ஒரு திரைப்படத்தை வெற்றிபெறச் செய்யக்கூடிய நடிகர் என்ற நம்பிக்கை திரையுலகில் அவருக்கு எதிராக மாறத் தொடங்கியது.
பெரிய பட்ஜெட்டில் உருவான இரண்டு படங்கள் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. தேசிய விருது பெற்ற நடிகரால் திரையரங்குகளில் ஒரு முழுமையான பிளாக்பஸ்டர் வெற்றியைக் கொடுக்க முடியவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்தன. சூர்யாவின் படத் தேர்வுகள் தவறாக இருக்கின்றன என்றும், அவர் மீண்டும் வெற்றிபெற்ற பழைய பாணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் திரைத்துறை வட்டாரங்களில் பேசப்பட்டது.
இத்தகைய சூழலில்தான் 2026-ம் ஆண்டில் சூர்யா பெற்றுள்ள மூன்று தொடர் வெற்றிகளின் முக்கியத்துவம் புரிகிறது. இது வெறும் வசூல் சாதனை மட்டுமல்ல.
2026: சூர்யாவின் ஆண்டாக மாறிய திரைப்பயணம்!
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான கருப்பு திரைப்படம், தமிழ் நாட்டுப்புறக் கதைகளையும் நம்பிக்கைகளையும் அடிப்படையாகக் கொண்ட ஃபேண்டஸி ஆக்ஷன் டிராமா. இதற்கு முன்பு நகைச்சுவை மற்றும் நையாண்டி படங்களுக்காக அறியப்பட்டவர் ஆர்.ஜே. பாலாஜி. இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் அவர் படம் இயக்கியதில்லை. சூர்யா போன்ற முன்னணி நடிகரையும் இயக்கிய அனுபவம் அவருக்கு இல்லை.
இப்படிப்பட்ட மாறுபட்ட கூட்டணியில் உருவான படத்தில் நடிக்க சூர்யா சம்மதித்தார். படம் வெளியான பிறகு ரசிகர்களிடம் கிடைத்த தொடர் வரவேற்பும், வாய்மொழி விமர்சனங்களும் பல வாரங்கள் படத்தைத் திரையரங்குகளில் ஓட வைத்தன. இதன் மூலம் உலகம் முழுவதும் ரூ.310 கோடி வசூலித்தது. சூர்யாவின் திரைப்பயணத்திலேயே அதிக வசூல் செய்த படமாக கருப்பு அமைந்தது.
இதன் மூலம் சூர்யா இன்னும் திரையரங்குகளில் பெரிய தொடக்கத்தைப் பெற்றுத் தரக்கூடிய நடிகராக இருக்கிறார் என்பது நிரூபணமானது.
கருப்பு படத்தின் வெற்றியை ஒரு குறிப்பிட்ட கதைக்களத்துக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் என்று கூறுவதற்கும் அடுத்ததாக வெளியான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முற்றுப்புள்ளி வைத்தது.
தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவான குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். உணர்வுபூர்வமான கதைகளை இயக்குவதில் பெயர் பெற்ற அவர், இதற்கு முன்பு முன்னணி நட்சத்திரத்தை மையமாகக் கொண்ட திரைப்படங்களை இயக்கியதில்லை. இந்தப் படத்தில் சூர்யா இதுவரை அதிகம் வெளிப்படுத்தாத ஒரு பக்கத்தை வெளிக்கொண்டு வந்தார். அதாவது, ஒரு சாதாரண மனிதராகத் திரையில் தோன்றினார்.
பழைய நினைவுகளையும் உணர்வுகளையும் பயன்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்த அவர், அதை ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சியாக மாற்றாமல் இயல்பாகக் கையாண்டார். சூர்யா தனது முந்தைய படங்களில் ஏற்று நடித்த கதாபாத்திரங்களின் உணர்வுப்பூர்வமான நினைவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
இந்த இரண்டு படங்களையும் தொடர்ந்து வெளியான சீன், மூன்று படங்களில் மிகவும் வித்தியாசமான முயற்சியாக அமைந்துள்ளது.
தொடர் கொலைகளைச் செய்யும் கொலையாளியைத் தேடும் பார்வையற்ற டிஎஸ்பி கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட டார்க் கிரைம் காமெடி திரைப்படம் இது. கொலை செய்வதை வாரத்தின் ஒரு சாதாரண நாளில் செய்யும் வழக்கமான செயல்பாடாகக் கருதும் சீரியல் கில்லரைத் தேடும் காவல் அதிகாரியாக சூர்யா நடித்துள்ளார்.
மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் தமிழில் முதன்முறையாக இயக்கியுள்ள இந்தப் படத்தில், நஸ்லென் வில்லனாக நடித்துள்ளார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு நஸ்ரியா நசீம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்துள்ளார். மலையாள இசையமைப்பாளர் சுஷின் ஷியாமும் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார்.
கருப்பு திரைப்படம் சூர்யாவால் இன்னும் ஒரு படத்துக்குப் பெரிய தொடக்கத்தைப் பெற்றுத் தர முடியும் என்பதை நிரூபித்தது. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அது தற்செயலான வெற்றி அல்ல என்பதை உறுதிப்படுத்தியது. ஆனால், சீன் இதைவிட முக்கியமான ஒரு விஷயத்தை நிரூபித்துள்ளது. எந்தவொரு கதைக்களமாக இருந்தாலும், சூர்யாவின் நடிப்பைப் பின்தொடர ரசிகர்கள் இப்போது தயாராக இருக்கிறார்கள் என்பதையே இந்தப் படம் காட்டுகிறது.
இதற்கு அந்தப் படத்தின் கதையும் ஒரு காரணம். புதுமையான கதை, கூர்மையான திரைக்கதை, கதையின் மீது முழுமையான நம்பிக்கை கொண்ட இயக்குநரின் அணுகுமுறை ஆகியவை படத்தின் வெற்றிக்கு உதவியுள்ளன.
அதே நேரத்தில், ஒரு நடிகராக சூர்யா தற்போது அடைந்துள்ள மாற்றமும் இதற்குக் காரணமாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் அவர் சந்தித்த தோல்விகள், ஒவ்வொரு காட்சியிலும் தானே மையமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் குறைத்துள்ளன. ஒட்டுமொத்தப் படத்தையும் தனது தோள்களில் சுமக்க வேண்டும் என்ற கட்டாயமும் குறைந்துள்ளது. ஒவ்வொரு காட்சியிலும் ஆதிக்கம் செலுத்தினால்தான் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நட்சத்திர நடிகருக்கான பதற்றமும் இப்போது அவரிடம் இல்லை.
இதன் விளைவாக, மற்ற நடிகர்களுடன் இணைந்து நடிப்பதில் இயல்பாக இருக்கும் ஒரு நடிகராக அவர் மாறியுள்ளார். பலவீனமான உணர்வுகளை மிகைப்படுத்தாமல் வெளிப்படுத்துகிறார். நகைச்சுவைக் காட்சிகளில் செயற்கைத்தனம் இல்லாமல் நடிக்கிறார். அதேபோல், தனது திரை ஆளுமையை வெளிப்படையாக அறிவிக்காமல் இயல்பாக வெளிப்படுத்துகிறார்.
தோல்விக்கும் வெற்றிக்கும் காரணமான படத் தேர்வுகள்!
இப்போது சூர்யாவுக்குத் தோல்வியைத் தந்த படங்களின் தேர்வுகளையும், வெற்றியைத் தந்த படங்களின் தேர்வுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
கங்குவா மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான ஒரு புதிய வகை முயற்சி. ஆனால், அந்த அளவிலான பட்ஜெட்டில் வணிக ரீதியாகப் படங்களை இயக்கிய அனுபவம் இயக்குநர் சிவாவுக்கு முன்பு சோதிக்கப்படவில்லை.
ரெட்ரோ பல்வேறு வகையான கதைக்களங்களை இணைத்துப் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட படம். அதன் இயக்குநரான கார்த்திக் சுப்புராஜின் திரைப்பட அணுகுமுறை, வழக்கமான வணிக சினிமா பாணியுடன் இயல்பாகப் பொருந்தக்கூடியது அல்ல.
இந்த இரண்டு படங்களும் வழக்கத்திற்கு மாறான முயற்சிகள்தான். சூர்யா தனது வழக்கமான நடிப்புப் பாணியைத் தாண்டி புதிய அனுபவங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதேபோன்ற ஆபத்தான படத் தேர்வுகள்தான் கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ், சீன் ஆகிய வெற்றிப் படங்களுக்கும் அடிப்படையாக இருந்தன.
அதாவது, தோல்வியைத் தந்த படங்களுக்கும் வெற்றியைத் தந்த படங்களுக்கும் இடையே படத் தேர்வில் பெரிய வித்தியாசம் இல்லை. கங்குவா தோல்வியடைந்த பிறகு சூர்யா தனது முடிவெடுக்கும் முறையை மாற்றிக்கொள்ளவில்லை. ரெட்ரோ படத்துக்குக் கலவையான விமர்சனங்கள் கிடைத்த பிறகும் பாதுகாப்பான கதைகளைத் தேர்வு செய்யவில்லை.
தனக்குப் பிடித்த இயக்குநர்கள், இதுவரை முயற்சி செய்யாத கதைக்களங்கள், புதிய பரிமாணங்களை வெளிப்படுத்த வேண்டிய கதாபாத்திரங்கள் எனத் தொடர்ந்து தனது விருப்பத்தின்படியே படங்களைத் தேர்வு செய்தார்.
தோல்விப் படங்களுக்கும் வெற்றிப் படங்களுக்கும் இடையிலான வேறுபாடு படத் தேர்வில் இல்லை. அவை திரையில் செயல்படுத்தப்பட்ட விதத்தில்தான் இருந்தது. வெற்றிப் படங்களின் திரைக்கதைகள் சிறப்பாக அமைந்தன. கதையின் உள்ளடக்கமும் அதன் மீதான எதிர்பார்ப்பும் சரியான அளவில் பொருந்தின. ஆனால், முடிவுகளை எடுத்த நடிகர் சூர்யா மாறவில்லை. அதே ஆபத்தை ஏற்கும் மனநிலையுடன் தொடர்ந்து தனது தேர்வுகளை மேற்கொண்டார். அதைத் திரையுலகம் தவறான முடிவுகளாகக் கருதியது.
இனி சூர்யாவின் அடுத்தகட்டப் பயணம் என்ன?
2026-ம் ஆண்டில் வெளியான சூர்யாவின் மூன்று படங்களின் மொத்த உலகளாவிய வசூல் ரூ.650 கோடியை நெருங்கி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தவறான படங்களைத் தேர்வு செய்கிறார் என்று விமர்சிக்கப்பட்ட நடிகர் சூர்யாவுக்கு, தற்போது கிடைத்துள்ள வசூல் வெற்றிகள் ஒரு புதிய நம்பிக்கையை அளித்துள்ளன.
எந்தவொரு கதைக்களத்திலும் சூர்யாவைப் பார்க்க ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதையும், அவருக்கு எந்த வகையான கதாபாத்திரமும் தடையாக இல்லை என்பதையும் இந்த வெற்றிகள் காட்டுகின்றன.
ஆனால், இந்தச் சுதந்திரத்தை அவர் அடுத்து எப்படிப் பயன்படுத்தப் போகிறார் என்பதுதான் கேள்வி.
தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளைப் பெற்ற பிறகு, அதே வெற்றிப் பாதையைத் தொடரும் படங்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்படலாம். வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ளும் வகையில் பாதுகாப்பான கதைகளைத் தேர்வு செய்யவும் வாய்ப்புள்ளது.
ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் சூர்யாவின் பயணம் நமக்குக் கற்றுக்கொடுத்துள்ள விஷயம் ஒன்றுதான். அவர் பாதுகாப்பான பாதையைத் தேர்வு செய்பவர் அல்ல. கங்குவா படத்தில் அவரை நடிக்கத் தூண்டிய அதே ஆர்வம்தான் அடுத்த படங்களையும் தேர்வு செய்ய வைக்கும்.
ஆனால், 2026-ம் ஆண்டுக்குப் பிறகு சூழல் மாறியுள்ளது. இதுவரை சூர்யாவின் படத் தேர்வுகளைக் கேள்வி எழுப்பிய திரையுலகம், இனி அவரது முடிவுகளைப் பின்தொடரத் தொடங்கும்.
தோல்விகள் அவரை உடைத்துவிடவில்லை. மாறாக, அவை அவருக்குப் புதிய சுதந்திரத்தை அளித்துள்ளன. அந்தச் சுதந்திரம்தான் அவரது திரைப்பயணத்தில் சிறந்த படைப்புகளை உருவாக்க வழிவகுத்து வருகிறது.
