தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த், நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வகையில், அவர் கதை, திரைக்கதை எழுதி தயாரித்த திரைப்படம்தான் 'வள்ளி'.
1993ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படத்தை இயக்குநர் கே. நடராஜ் இயக்கியிருந்தார். இப்படத்தில் பிரியா ராமன் கதாநாயகியாகவும், சஞ்சய் பார்கவ் கதாநாயகனாகவும் நடித்திருந்தனர். மேலும், வடிவேலு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இப்படத்தில் ரஜினிகாந்த் வீரய்யன் என்ற கதாபாத்திரத்தில் கௌரவத் தோற்றத்தில் நடித்திருந்தார்.
இளையராஜா இசையில் உருவான பாடல்கள்!
'வள்ளி' திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக, 'என்னுள்ளே என்னுள்ளே' என்ற பாடல் இன்றளவும் ரசிகர்களால் விரும்பிக் கேட்கப்படும் பாடலாக உள்ளது.
கார்த்திக் ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்ட பாடல்!
இந்தப் படத்திற்கான பாடல்களை உருவாக்கும் பணியில் இளையராஜா ஈடுபட்டிருந்தபோது, 'என்னுள்ளே என்னுள்ளே' பாடலை உருவாக்கும் சமயத்தில் திடீரென அவசர வேலையாக வெளியூர் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், அந்தப் பாடலின் இசைப் பொறுப்பை தனது மகன் கார்த்திக் ராஜாவிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றுள்ளார்.
இதுகுறித்து பாடகர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரன், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்ட தகவலின்படி, அந்தப் பாடலில் தற்போது கேட்கப்படும் ஆர்க்கெஸ்ட்ரேஷன் பகுதியை கார்த்திக் ராஜா அமைத்துள்ளார்.
இவ்வாறு உருவான 'என்னுள்ளே என்னுள்ளே' பாடல் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது.
ரஜினிகாந்த் தயாரித்த 'வள்ளி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றாலும், அதில் இடம்பெற்ற இந்தப் பாடல் மட்டும் இன்றளவும் ரசிகர்களின் விருப்பமான பாடல்களில் ஒன்றாகத் திகழ்கிறது
