சமீபத்திய பேட்டி ஒன்றில், சில்க் ஸ்மிதாவுடன் வலுவான நட்பைப் பகிர்ந்து கொண்ட ஊர்வசி, அவர் தனது தோற்றத்தின் காரணமாக எவ்வாறு வித்தியாசமாக நடத்தப்பட்டார் என்பதை நினைவு கூர்ந்தார்.
திரைப்படங்களில் பெண்கள் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களை வைத்து அவர்களை விமர்சிப்பது இந்திய திரையுலகில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஒன்றாகவே உள்ளது. தற்போது டாக்ஸிக் படத்தில் கியாரா அத்வானி நடித்துள்ள துணிச்சலான காட்சிகளுக்காக அவர் எதிர்கொள்ளும் விமர்சனங்கள் முதல், தமிழ்த் திரையுலகில் தனது காலகட்டத்தில் சில்க் ஸ்மிதா எதிர்கொண்ட விமர்சனங்கள் வரை, இந்தப் போக்கு தொடர்ந்து காணப்படுகிறது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:
அப்போது இருந்த நிலைக்கும் தற்போதைய நிலைக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் உள்ளது. முன்பு, சில்க் ஸ்மிதா போன்ற குறிப்பிட்ட நடிகைகள் பெரும்பாலும் கவர்ச்சிகரமான மற்றும் துணிச்சலான காட்சிகளில் நடிக்கவே தேர்வு செய்யப்பட்டனர். இதுபோன்ற காட்சிகளில் நடித்ததற்காக அவர்கள் சமூகத்தாலும் திரையுலகினராலும் தாழ்வாகப் பார்க்கப்பட்டனர். ஆனால், இன்றைய காலகட்டத்தில் முன்னணி நடிகைகளே இதுபோன்ற காட்சிகளில் நடிக்கின்றனர். இருந்தாலும், அவர்களுக்கு எதிரான விமர்சனங்கள் மட்டும் மாறவில்லை.
இன்றைய காலத்தில் சமூக வலைதளங்கள் மற்றும் ஏராளமான கவனச் சிதறல்கள் காரணமாக மக்களின் கவன ஈர்ப்பு நேரம் குறைந்துவிட்டது. இதனால், ஒரு சர்ச்சை விரைவாக செய்திகளிலிருந்து மறைந்து விடுகிறது. ஆனால், கடந்த காலங்களில் உருவான சர்ச்சைகள் பல ஆண்டுகளாகப் பேசப்பட்டு வந்தன. துரதிர்ஷ்டவசமாக, சில்க் ஸ்மிதா அத்தகைய காலகட்டத்தைச் சேர்ந்தவர். அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்களின் தன்மை காரணமாகவே திரைப்படப் படப்பிடிப்பு தளங்களில் அவருக்கு மற்றவர்களைவிட வித்தியாசமான அணுகுமுறை இருந்ததாகக் கூறப்படுகிறது.
சில நேரங்களில் அவர் படப்பிடிப்பு தளங்களிலேயே தனிமைப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கதாநாயகன் மற்றும் கதாநாயகி ஒன்றாக அமருவதற்காக நாற்காலிகள் போடப்பட்டிருக்கும். ஆனால், சில்க் ஸ்மிதாவுக்கு மட்டும் மற்றவர்களிடமிருந்து சற்று தள்ளி தனியாக ஒரு நாற்காலி போடப்பட்டதாகக் கூறப்படுகிறது. சில்க் ஸ்மிதாவுடன் நெருங்கிய நட்பைக் கொண்டிருந்த அவரது சக நடிகை ஊர்வசி, சமீபத்தில் அவர் தனது திரை பிம்பத்தின் காரணமாக எவ்வாறு வித்தியாசமாக நடத்தப்பட்டார் என்பதை நினைவுகூர்ந்துள்ளார்.
க்ளப் எப்.எம் கேரளாவுக்கு (Club FM Kerala) வுக்கு அளித்த பேட்டியில் ஊர்வசி கூறுகையில், “அவர் படப்பிடிப்பு தளத்தில் யாரிடமும் அதிகமாகப் பேச மாட்டார். பெரும்பாலும் அனைவரிடமிருந்தும் விலகி தனியாகவே அமர்ந்திருப்பார். அந்தக் காலகட்டத்தில் கவர்ச்சிகரமான கதாபாத்திரங்களில் நடித்த நடிகைகள் வித்தியாசமாக நடத்தப்பட்டனர். கதாநாயகர்களும் கதாநாயகிகளும் ஒன்றாக அமர்ந்திருப்பார்கள். ஆனால், கவர்ச்சிகரமான கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகைகள் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தால், அவர்களை வித்தியாசமான பார்வையிலேயே பார்ப்பார்கள். அவர்களின் ஆடைகளும் அதிக கவர்ச்சியுடன் இருக்கும்.
ஊர்வசி கூறிய ‘கவர்ச்சிகரமான’ ஆடைகள் என்பது பாலுணர்வைத் தூண்டும் வகையிலும், உடலை அதிகமாக வெளிப்படுத்தும் வகையிலும் அமைந்த ஆடைகளை குறிக்கிறது. இதற்கு முன்பும் சில்க் ஸ்மிதா தனக்கு எவ்வாறு உதவினார், ஒரு மூத்த சகோதரியைப் போல தன்னை அக்கறையுடன் கவனித்துக் கொண்டார் என்பது குறித்து ஊர்வசி பேசியுள்ளார். அதேபோல், சில்க் ஸ்மிதாவின் சிறந்த ஆடைத் தேர்வு மற்றும் அலங்கார ரசனையையும் அவர் நினைவுகூர்ந்தார்.
“என்னைப் பொறுத்தவரை, சில்க் ஸ்மிதாவுக்கு இருந்த ஆடைத் தேர்வு உணர்வு சிறந்தது. நிறங்கள் மற்றும் மேக்கப் குறித்து அவருக்கு மிகச் சிறந்த ரசனை இருந்தது. அந்தக் காலத்தில் அனைவருமே அதிக அளவில் மேக்கப் பயன்படுத்துவார்கள். கவர்ச்சிகரமான கதாபாத்திரங்களில் நடித்த பல நடிகைகள் தங்களது கண் இமைகளில் கூட மினுமினுப்பான அலங்காரப் பொருட்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால், சில்க் ஸ்மிதா எதை அணிந்தாலும் அது ஒருபோதும் ஆபாசமாகத் தெரியாது. எந்தவிதமான ஆடையையும் அவரால் மிகவும் அழகாகக் கையாள முடியும்.”
திரையில் சில்க் ஸ்மிதாவை ரசிகர்கள் பெரும்பாலும் கவர்ச்சியான கதாபாத்திரமாகவே பார்த்தனர். ஆனால், அவரது தனிப்பட்ட ஆர்வங்களும் திறமைகளும் அதைவிட மிகவும் அதிகம். ஆடை வடிவமைப்பு மற்றும் ஸ்டைலிங் மீது அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. ஒருகட்டத்தில் ஊர்வசிக்காகவே ஆடைகளை வடிவமைக்க வேண்டும் என்றும் அவர் விரும்பியுள்ளார்.
இதுகுறித்து ஊர்வசி கூறுகையில், “என்னுடைய திரைப்படங்களில் குறைந்தபட்சம் ஒரு படத்திற்காவது எனக்கான ஆடைகளை வடிவமைக்க வேண்டும் என்று சில்க் ஸ்மிதா மிகவும் விரும்பினார். ‘நான் உனக்கான ஆடைகளை வடிவமைத்தால், நீ மிகவும் அழகாகத் தெரிவாய். உனக்கு நல்ல உடலமைப்பு இருக்கிறது. அவர்கள் உனக்குக் கொடுக்கும் ஆடைகள் சாதாரணமாக எந்த நாளிலும் அணியக்கூடிய ஆடைகள் போன்றவைதான்’ என்று அவர் என்னிடம் கூறுவார். அவர்கள் கொடுக்கும் ஆடைகளை நான் அப்படியே அணிந்து கொள்வேன்.”
மிகவும் சாதாரணமான காட்சிகளுக்குக்கூட தனது நடிப்பின் மூலம் கவர்ச்சியை ஏற்படுத்தும் திறன் சில்க் ஸ்மிதாவுக்கு இருந்ததாக திரைப்பட வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான ராண்டார் கையும் குறிப்பிட்டுள்ளார். பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், “தனது உடலில் இருந்து வெளிப்படும் பாலுணர்வைக் கட்டுப்படுத்த முடியாதவர் போல அவர் தோன்றுவார். ஆண்களிடம் தான் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து அவர் ஒருபோதும் விலகிச் செல்லவில்லை” என்று குறிப்பிட்டார்.
தென்னிந்திய திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக சில்க் ஸ்மிதா உயர்ந்த பயணம் மிகவும் வித்தியாசமானது. அவரது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்த பின்னர் அவர் தமிழ்நாட்டிற்கு வந்தார். ஆரம்பத்தில் மேக்கப் உதவியாளராகப் பணியாற்றினார். அதன்பின்னர் மலையாளத் திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. படிப்படியாகத் தனது நடிப்பின் மூலம் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டார்.
விரைவில் அவரது புகழ் அதிகரித்து, அவரது பெயரை வைத்தே திரைப்படங்களுக்கு ரசிகர்கள் திரண்டு டிக்கெட் வாங்கும் அளவுக்கு அவர் பிரபலமானார். சுமார் இரண்டு தசாப்தங்களாக திரையுலகில் ஆதிக்கம் செலுத்திய சில்க் ஸ்மிதா, தென்னிந்திய மொழித் திரைப்படங்களிலும் இந்தி திரைப்படங்களிலும் சேர்த்து 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவ்வளவு பெரிய புகழைப் பெற்றிருந்தபோதிலும், அவருக்கு அரிதாகவே முக்கியத்துவம் வாய்ந்த அல்லது வலுவான கதாபாத்திரங்கள் வழங்கப்பட்டன.
silk
பெரும்பாலும் கவர்ச்சிகரமான பாடல் காட்சிகளில் அவர் நடிக்க வைக்கப்பட்டார். அந்தக் காட்சிகளில் அவரது கதாபாத்திரங்கள் பெரும்பாலும் வில்லன்கள், தவறான நோக்கங்களைக் கொண்ட ஆண்கள் அல்லது அவர்களின் கற்பனைகள் போன்ற பின்னணியில் அமைக்கப்பட்டிருக்கும். 1980களில் தனது திரைப்பயணத்தின் உச்சத்தில் இருந்தபோது, ஒரு பாடல் காட்சியில் நடிப்பதற்காக சில்க் ஸ்மிதா ஒரு நாளுக்கு ரூ.50,000 வரை சம்பளம் பெற்றதாகக் கூறப்படுகிறது. அந்தக் காலகட்டத்தைப் பொறுத்தவரை இது மிகப்பெரிய தொகையாகும்.
1996ஆம் ஆண்டு, சென்னையில் உள்ள தனது வீட்டில் சில்க் ஸ்மிதா தனது 35வது வயதில் தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்திற்கு நிதி நெருக்கடி காரணமாக இருந்ததாக சில தகவல்கள் தெரிவித்தன. அதே நேரத்தில், தோல்வியடைந்த காதல் மற்றும் தனிமை உள்ளிட்ட தனிப்பட்ட காரணங்களும் அவரது மரணத்திற்குப் பின்னணியாக இருந்ததாக வேறு சில தகவல்கள் கூறின. இதன் மூலம், திரையில் மிகப்பெரிய புகழைப் பெற்றிருந்தாலும், திரைக்கு வெளியே ஆழமான தனிமையுடன் வாழ்ந்த ஒரு நடிகையாக சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை அமைந்திருந்ததாகத் தெரிகிறது.
