இந்திய வான்வெளியில் உலா வரும் அண்டை நாடுகளின் உளவுச் செயற்கைக்கோள்கள் மற்றும் விண்வெளிக் கழிவுகளைச் சுயமாகக் கண்காணிக்கும் 'மொசைக்' (MOSAIC) என்ற நவீன தொழில்நுட்பத்தை 'டிகந்தரா' என்ற இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இந்திய விண்வெளி தொழில்நுட்பத் துறையில் ஒரு புதிய மாற்றமாக, அண்டை நாடுகளின் உளவு செயற்கைக்கோள்களைக் கண்காணித்து எச்சரிக்கும் அமைப்பை பெங்களூரைச் சேர்ந்த 'டிகந்தரா' என்ற இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனம் உருவாக்கி வருகிறது. 'மொசைக்' என அழைக்கப்படும் இந்த தன்னாட்சி அமைப்பு, இந்திய வான்வெளியில் உலா வரும் செயற்கைக்கோள்கள் மற்றும் விண்வெளிக் கழிவுகளைக் கண்டறிந்து கண்காணிக்கும் திறனைக் கொண்டுள்ளது.
1998-ல் பொக்ரானில் இந்தியா அணுஆயுதச் சோதனைகளை மேற்கொண்டபோது, அமெரிக்காவின் உளவு செயற்கைக்கோள்களின் பார்வையில் படாமல் மறைந்து செயல்பட வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால், தற்போதைய நவீன பாதுகாப்பில் பிற நாடுகளின் செயற்கைக்கோள்கள் எப்போது நம் பகுதியை நோட்டமிடுகின்றன என்பதைத் துல்லியமாகத் தெரிந்துகொள்வது அவசியமாகிறது. இந்தச் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 'மொசைக்' தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய விண்வெளி கண்காணிப்பு அமைப்புகளைப் போல மனிதர்களின் வழிகாட்டுதலின்றி, இந்த அமைப்பு சுயமாகவே வான்வெளியைக் கண்காணிக்கும். செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் (AI & ML) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, விண்மீன்கள், செயற்கைக்கோள்கள் மற்றும் விண்வெளிக் கழிவுகளை இது துல்லியமாக வேறுபடுத்தி அறியும். லடாக்கின் குளிர்ச்சியான இரவுப் பொழுதில் சோதிக்கப்பட்ட இந்த அமைப்பின் ஒரு அலகு, ஒரே இரவில் 400 முதல் 500 வரையிலான தனித்துவமான விண்வெளிப் பொருட்களைக் கண்டறியும் திறன் கொண்டது.
விண்வெளிப் பொருட்கள் தொடர்ந்து நகர்ந்துகொண்டே இருப்பதால், அவற்றை ஒரே இடத்திலிருந்து முழுமையாகக் கண்காணிக்க முடியாது. இதன் காரணமாக, இந்தியாவைத் தவிர்த்து சிலி, நமீபியா, நியூ மெக்சிகோ மற்றும் ஹவாய் போன்ற தெளிவான வானிலை கொண்ட உலகளாவிய இடங்களில் தனது கண்காணிப்பு மையங்களை டிகந்தரா நிறுவி வருகிறது. அமெரிக்கா போன்ற வெளிநாடுகளின் விண்வெளித் தரவுகளை மட்டுமே நம்பியிருக்காமல், இந்தியா சொந்தமாகத் தரவுகளைச் சேகரித்து தற்சார்பு அடைய இது வழிவகுக்கிறது.
இராணுவப் பாதுகாப்பு மட்டுமன்றி, விண்வெளியில் செயற்கைக்கோள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்வதைத் தடுக்கும் சிவில் பயன்பாட்டிற்கும் இது உதவுகிறது. மேலும், 'லாஸ்ட் இன் ஸ்பேஸ்' (Lost in Space) என்ற சிறப்பம்சத்தின் மூலம், ஜி.பி.எஸ் (GPS) சேவை இல்லாத சூழலிலும் நட்சத்திரங்களின் அமைப்பை வைத்து இந்த அமைப்பால் தன் இருப்பிடத்தைத் துல்லியமாகத் தீர்மானிக்க முடியும். எதிரி நாட்டுச் செயற்கைக்கோள்களின் கேமரா லென்ஸ்களை தற்காலிகமாகச் செயல்படவிடாமல் தடுக்கும் லேசர் தொழில்நுட்பத்தையும் (Laser-dazzling) இந்நிறுவனம் உருவாக்கி வருகிறது. ஒரு காலத்தில் விண்வெளிக்குச் செயற்கைக்கோள்களை அனுப்புவதை மட்டுமே இலக்காகக் கொண்டிருந்த இந்தியா, இன்று விண்வெளியில் பிற நாடுகள் என்ன செய்கின்றன என்பதைக் கண்காணிக்கும் புதிய பாதுகாப்புக் கட்டத்திற்குள் வெற்றிகரமாகக் காலடி எடுத்து வைத்துள்ளது.
