Tuvalu and sea level rise : கடல் உயர்ந்துகொண்டே சென்றால், ஒரு நாடே வரைபடத்திலிருந்து மறைந்துவிடுமா?தெற்குப் பசிபிக் பெருங்கடலின் மத்தியில் வெறும் 26 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்புடன் அமைந்துள்ள துவாலு, அந்த அச்சுறுத்தலை நிஜமாக எதிர்கொண்டு வருகிறது.
உலகின் கடல் மட்ட உயர்வால் மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்கும் நாடுகளில் ஒன்றாகத் திகழும் இந்தச் சிறிய தீவு நாடு, எதிர்காலத்தில் தனது நிலத்தையும் வாழ்விடத்தையும் கடலிடம் இழக்கும் அபாயத்தில் உள்ளது. தெற்குப் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள இந்நாட்டின் மொத்த நிலப்பரப்பு வெறும் 26 சதுர கிலோமீட்டர்.

அழிவின் விளிம்பில் துவாலு
சுமார் 10,000 பேர் வசிக்கும் துவாலுவின் சராசரி உயரம் கடல் மட்டத்திலிருந்து 2 மீட்டருக்கும் குறைவாக உள்ளது. காலநிலை மாற்றத்தால் இப்பகுதியில் கடல் மட்டம் ஆண்டுக்கு சுமார் 3.9 மில்லிமீட்டர் உயர்ந்து வருகிறது.
இதனால் கடல் நீர் நிலத்தடி நீரில் கலப்பது, குடிநீர் தட்டுப்பாடு, விவசாய நிலங்களின் பாதிப்பு மற்றும் கடற்கரை அரிப்பு போன்ற பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளன. தற்போதைய நிலை தொடர்ந்தால், 2050 முதல் 2100-க்குள் துவாலுவின் பெரும்பாலான பகுதிகள் வாழத் தகுதியற்றதாக மாறக்கூடும் என எச்சரிக்கப்படுகிறது.

இந்த நிலையில், நாட்டைப் பாதுகாக்கும் முயற்சியாக ஐ.நா.வின் UNDP உதவியுடன் செயற்கை நில மீட்பு மற்றும் கடல் அலைத் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதேவேளை, துவாலு அரசு தனது கலாசாரம், வரலாறு மற்றும் இறையாண்மையை எதிர்காலத்திலும் பாதுகாக்கும் நோக்கில், நாட்டை முழுமையான டிஜிட்டல் வடிவில் (Digital Twin) மெட்டாவர்ஸ் தொழில்நுட்பத்தில் பதிவு செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.

மேலும், உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் “.tv” இணையதள டொமைன் துவாலுவுக்குச் சொந்தமானது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதை குத்தகைக்கு விடுவதன் மூலம் கிடைக்கும் வருவாய் அந்நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
எந்த நாடும் அழியக் கூடாது; அழியவும் விடக்கூடாது... அதற்கேற்ற உதவிகளைப் பிறநாடுகளும் செய்ய வேண்டும் என்பதே வல்லுநர்களின் நிலைப்பாடாக இருக்கின்றது.
