எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்திலேயே அமைக்கப்பட்டு இருக்கும் இ-சேவை மையத்தையும் தொடங்கி வைக்க உள்ளார்.
 

பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்தை முதலமைச்சர் விஜய் இன்று திறந்து வைக்கிறார். மேலும் மக்களை சந்தித்து இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்குகிறார்.

முதலமைச்சர் விஜய்

த.வெ.க.  தலைவர் விஜய், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்டு 2 தொகுதிகளிலுமே வெற்றி வாகை சூடியதோடு, முதலமைச்சர் அரியணையையும் அலங்கரித்தார்.

2 தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியை அவர் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை வந்த நேரத்தில், பெரம்பூர் தொகுதியை கையில் எடுத்துக்கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார்.

பெரம்பூர் தொகுதி

இதன் மூலம் பெரம்பூர் தொகுதி முதலமைச்சரின் தொகுதியாக வி.ஐ.பி. என்ற அந்தஸ்தை பெற்றது. பொதுவாக அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.க்களுக்காக அதே தொகுதியில் அலுவலகம் அமைக்கப்படும்.

எம்.எல்.ஏ. அலுவலகம் திறப்பு

அந்தவகையில் பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடி சர்மா நகரில் பிரமாண்டமாக எம்.எல்.ஏ. அலுவலகம் தேவையான வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு வந்தது. இதுதொடர்பான செய்திகள் பத்திரிகை கள், சமூக வலைதளங்களிலும் வைரல் ஆகின. இதை முதலமைச்சர் விஜய் எப்போது திறந்து வைப்பார்? என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

இந்த நிலையில் பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்தை முதலமைச்சர் விஜய்  இன்று திறந்து வைக்க இருக்கிறார். இதற்காக இன்று பிற்பகல் 3.30 மணிக்கு அங்கு வரும் முதலமைச்சர், எம்.எல்.ஏ. அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கிறார். அதனைத்தொடர்ந்து எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்திலேயே அமைக்கப்பட்டு இருக்கும் இ-சேவை மையத்தையும் தொடங்கி வைக்க உள்ளார்.

இ-சேவை மையம்

இ-சேவை மையத்தை தொடங்கி வைத்து அதனை பார்வையிடுகிறார். இதனையடுத்து எம்.எல்.ஏ. அலுவலகத்தில் தொகுதி மக்களிடம் மனுக்களை விஜய் நேரில் வாங்குகிறார். தொடர்ந்து இ-சேவை மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு அதற்கான சான்றிதழ்களையும் வழங்குகிறார்.

மின்சார வாகன சார்ஜிங் நிலையம்

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, மாலை 4 மணிக்கு வியாசர்பாடி மெட்ரோவில் போக்குவரத்துக் கழகத்தால் அமைக்கப்பட்டு இருக்கும் மின்சார வாகன சார்ஜிங் நிலையத்தை பார்வையிடுகிறார்.

அதன் பிறகு, எம்.கே.பி.நகரில் ரேஷன் கடையை பார்வையிட உள்ளார். அங்கு ஆய்வையும் நடத்துகிறார். மேலும் 50 பேருக்கு புதிய ரேஷன் அட்டையை வழங்குவதோடு, அவர்களுக்கான பொருட்களையும் வழங்க இருக்கிறார்.