அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா, வரும் 2024ம் ஆண்டு நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக 3 வெவ்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. இந்த திட்டத்துக்கு 28 பில்லியன் டாலர் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் நிலவில் தரையிறங்கும் தொழில்நுட்பங்களை மேம்படுத்தி உள்ளது.

 

நிலவில் தரையிறங்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய விண்கலத்தை சுமந்து செல்லும், புளூ ஆரிஜின் நிறுவனத்தின் நியூ ஷெப்பர்டு ராக்கெட் தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வருகிறது. அவ்வகையில் சமீபத்தில் டெக்சாஸ் மாநிலத்தின் வான் ஹார்ன் நகரில் இருந்து நியூ ஷெப்பர்டு ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது. மீண்டும் பயன்படுத்தக் கூடிய ராக்கெட் மூலம் நடத்தப்பட்ட இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்தது. 

 

ஆளில்லாத விண்கலத்தை சுமந்து கொண்டு புறப்பட்ட இந்த ராக்கெட் துல்லியமாக இலக்கை அடைந்தது. பின்னர் ராக்கெட் பூஸ்டரில் இருந்து பிரிந்த விண்கலம் பாராசூட் மூலம் பூமியில் இறங்கியது. முன்னதாக ராக்கெட் பூஷ்டர் பூமிக்கு திரும்பி செங்குத்தாக தரையிறங்கியது. 

 

இதுபற்றி புளூ ஆரிஜின் நிறுவன அதிகாரி கெய்த்லின் கூறுகையில், ‘இந்த குறிப்பிட்ட ராக்கெட் பூஸ்டரின் தொடர்ச்சியான ஏழாவது சோதனை இதுவாகும். புளூ ஆரிஜினின் நியூ ஷெப்பர்ட் திட்டத்தின் 13வது ராக்கெட் இது. தரையில் இருந்து புறப்பட்ட 8 நிமிடங்களில் ராக்கெட் பூஸ்டர் பூமிக்குத் திரும்பியது. அதன்பின்னர் 10 நிமிடங்கள் கழித்து கேப்ஸ்யூல் (விண்கலம்) துல்லியமாக தரையிறங்கியது’ என்றார்.