தினமும் இரவில் தாமதமாக தூங்கும் பழக்கம் உள்ளவர்கள் என்னென்ன பாதிப்பை சந்திக்கின்றனர் என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் வேலைப்பளு காரணமாக பலரும் இரவில் அதிக நேரம் கண்விழிப்பது சாதாரணமாகிவிட்டது. ஆனால் இந்த பழக்கம் உங்களது நினைவாற்றலையும் பாதிக்குமாம்.
பொதுவாக நாம் தூங்கும் போது தான் நமது உடல் ஓய்வெடுக்கின்றது என்று நினைக்கின்றோம். நமது மூளை இரவு நேரத்தில் மிகவும் முக்கியமான வேலையை செய்கின்றது.
அதாவது பகலில் நாம் பார்த்த, செய்த காரியங்கள் அனைத்தையும் நமது மூளை இரவில் வரிசைப்படுத்தி, நினைவுகளாக மாற்றுகின்றது.
தூக்கம் இல்லாததால் நமது மூளை தகவல்களை சரியாக சேமிக்க முடியாமல் போகும் போது, நினைவாற்றல் பாதிக்கப்படுகிறது.
இரவு நேர நீண்ட நேரம் கண் விழித்தால், மறுநாள் காலையில் புதிய விடயங்களை கற்றுக்கொள்வது கடினமாக இருக்கும். ஒரு விடயத்தினை பார்த்து படிப்பதும், புரிந்து கொள்வதும் அதிகமான நேரம் எடுக்குமாம்.
இரவில் தாமதமாக தூங்குவது மறதி அதிகரிக்குமாம். நேற்று நடந்ததை மறந்து போவது, பொருட்களை வைத்த இடம் தெரியாமல் போவது, திடீரென பெயரை மறந்துவிடுவது என்ற தொந்தரவு ஏற்படும். இவை தினசரி வாழ்க்கையில் எரிச்சலையும், சிக்கல்களையும் உருவாக்கும்.
இரவில் தாமதமாக தூங்குகினால் வேலையில் முழுமையான கவனம் செலுத்த முடியாமல் போவதுடன், எளிதில் கவனச்சிதறல் ஏற்படுவது போன்ற பிரச்சனை வரலாம். இதனால் அன்றாட வேலையும் பாதிக்கும் நிலை ஏற்படுவதுடன், சாலையில் செல்லும் போது பாதிப்பு ஏற்படும்.
தூக்கமின்மை சரியான முடிவுகளை எடுக்கும் திறனை குறைப்பதுடன், ஒரு பிரச்சனையை நிதானமாக அணுகி தீர்வு காண்பதில் சிரமம் ஏற்படும். தனிப்பட்ட நிதி முடிவுகளிலும் இதன் தாக்கம் இருக்குமாம்.
நினைவாற்றல் குறைவது மனதளவில் அழுத்தத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்துவதுடன், மனநல பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும். நாள்பட்ட தூக்கமின்மை மனச்சோர்வு போன்ற தீவிரமான பிரச்சனைகளுக்கும் காரணமாகலாம்.
நினைவாற்றல் மட்டுமல்லாமல், தூக்கமின்மையும் உடல் ரீதியாகவும் பல பிரச்சனைகளை ஏற்படுத்துவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து, உடல் எடையும் அதிகரிக்கின்றது. மேலும் சர்க்கரை நோய், இதய நோய் அபாயமும் அதிகரிக்கின்றது.