தற்காலத்தில் துரித உணவுகளை விரும்பி சாப்பிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மக்ரோனி மோகம் அதிகரித்துவிட்டது.
அதனால் மக்ரோனியை அதிகமான இளைஞர்கள் ஹோட்டலேகளில் வாங்கி சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
ஹோட்டலே சுவையை மிஞ்சும் அளவுக்கு வீட்லேயே அசத்தல் சுவையில் ஆரோக்கியமான முறையில் எவ்வாறு மசாலா சீஸ் மக்ரோனி செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மக்ரோனி வேக வைப்பதற்கு தேவையானவை
மக்ரோனி - 2 கப்
நீர் - தேவையான அளவு
உப்பு - சிறிதளவு
எண்ணெய் - 1 தே.கரண்டி
தாளிப்பதற்கு
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தே.கரண்டி
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
மிளகாய் தூள் - 1/2 தே.கரண்டி
மல்லித் தூள் - 1 தே.கரண்டி
கரம் மசாலா - 3/4 தே.கரண்டி
தக்காளி சாஸ் - 1 தே.கரண்டி
சீஸ் - சிறிது (துருவியது)
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் மக்ரோனியை போட்டு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவிட வேண்டும்.
நீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் உப்பு மற்றும் 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
மக்ரோனி வெந்ததும், குளிர்ந்த நீரில் ஒருமுறை மக்ரோனியை அலசி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு கண்ணாடி பதத்திற்கு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தக்காளி சேர்த்து மென்மையாக வதக்கி, மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
இறுதியாக தக்காளி சாஸ் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, வேக வைத்துள்ள மக்ரோனியையும் சேர்த்து நன்கு 2 நிமிடங்கள் வரையில் நன்றாக கிளறி விட்டு, சீஸை தூவி, மூடி வைத்து சில நிமிடங்கள் வேக வைத்து இறக்கினால், சுவையான மசாலா சீஸ் மக்ரோனி தயார்.