பொதுவாகவே பாகற்காய் என்றதுமே அனைவரும் முகம் சுழிப்பதற்கு காரணம் அதன் கசப்புத் தன்மை தான்.
இது கசப்பாக இருந்தாலும் பல்வேறு ஆரோக்கியம் தரக்கூடிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. பாகற்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயன்தரக்கூடியது, உடலில் சர்க்கரை அளவை கணிசமாக குறைக்க உதவும்.
குழந்தைகளுக்கும் பாகற்காய் கொடுப்பது மிகவும் நல்லது, குடற்புழுக்கள் தொடர்பான பிரச்சினைகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இது மிகச்சிறந்த தீர்வை கொடுக்கும்.
இவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்ட பாகற்காயை கொண்டு கசப்பு தன்மை கொஞ்சமும் தெரியாமல் குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் எவ்வாறு பாகற்காய் பொரியல் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பாகற்காய் - 400 கிராம்
உப்பு - சுவைக்கேற்ப
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
மிளகாய் தூள் - 1 1/2 தே.கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
மல்லித் தூள் - 1 தே.கரண்டி
சீரகத் தூள் - 1/2 தே.கரண்டி
சோம்புத் தூள் - 1/2 தே.கரண்டி
கரம் மசாலா - 1/2 தே.கரண்டி
பச்சரிசி மாவு - 3 மேசைக்கரண்டி
ரவை - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை
முதலில் பாகற்காயில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு, நன்றாக சுத்தம் செய்து சற்று நீளமான மெல்லிய துண்டுகளாக வெட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து பாகற்காயுடன் சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கைகளால் நன்கு பிசைந்துவிட்டு நன்றாக 30 நிமிடங்கள் வரையில் ஊறவிட வேண்டும்.
1/2 மணிநேரம் கழித்து, பாகற்காயில் உள்ள அதிகப்படியான நீரைகைகளால் பிழிந்து முழுமையாக நீக்கிவிட வேண்டும். இந்த நீரில் தான் கசப்பு தன்மை அதிகம் இருக்கும். அதனை நீக்கிவிடடால் கசப்பு போய்விடும்.
அதன் பின்னர் பாகற்காயுடன் மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், சோம்புத் தூள், கரம் மசாலா, பச்சரிசி மாவு, ரவை ஆகியவற்றை நேர்த்து நன்றாக பிசைந்து மசாலா பாகற்காயில் சேரும் வரையில் நன்றாக பிசைந்துவிட்டு ஊறவிட வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், மிதமான தீயில் வைத்து பாகற்காய் துண்டுகளை சேர்த்து, கிளறி விட்டு, நன்கு மொறுமொறுவென்ற பதத்தில் பொரித்து எடுத்தால் எவ்வளவு தான் அசத்தல் சுவையில் பாகற்காய் பொரியல் தயார்.