கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முக கவசம் அணிவது பல்வேறு நாடுகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் முக கவசம் அணியாத நபர்களுக்கு சிறை, அபராதம் உள்ளிட்ட தண்டனைகளும் வழங்கப்பட்டு விடுகிறது.
இந்த நிலையில் இந்தோனேசியாவில் முக கவசம் அணியாமல் போலீசாரிடம் சிக்கினால் அவர்கள் கல்லறைகளை தோண்டவேண்டும் என்று நூதன தண்டனை வழங்கப்படுகிறது. அந்த நாட்டின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் தான் இந்த நூதன தண்டனை வழங்கப்படுகிறது.
அங்கு முக கவசம் இல்லாமல் பிடிபடும் நபர்கள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு கல்லறைகளை தோண்டுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “கொரோனா பாதித்து மரணமடைபவர்களை அடக்கம் செய்ய, குழிகள் தோண்டுவதற்கு எங்களிடம் தற்போது 3 பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். எனவே முக கவசம் அணியாமல் பிடிபடும் நபர்களை அவர்களுடன் வேலை செய்ய வைக்கலாம் என்று திட்டமிட்டேன்” என்று கூறினார்.
மேலும் அவர், “கொரோனா காலத்தில் முக கவசம் மிகவும் அத்தியாவசியமானது. எனவே இந்த தண்டனையானது விதிமீறல்களுக்கு எதிராக ஒரு தடுப்பு விளைவை உருவாக்கும் என்று நம்புகிறேன்,” என்றும் கூறினார்.