கொரோனா ஊரடங்கிற்கு பின்னர், புதுவை மாநிலத்தில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கடந்த அக்டோபர் மாதம் 8-ந் தேதி முதல் ஒருநாள் விட்டு ஒருநாள் வகுப்புகள் செயல்பட தொடங்கின. இந்த நாட்களில் மாணவர்களின் சந்தேகம் மட்டும் தீர்க்கப்பட்டன. அதன்பின்னர் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் சந்தேகத்தை தீர்த்து கொள்ள ஜனவரி மாதம் 3-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதன்படி 2 பிரிவுகளாக பிரித்து வாரத்தில் 6 நாட்கள் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மட்டும் வகுப்புகள் நடைபெற்று வந்தது. மாணவர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.
இந்தநிலையில் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி பள்ளிகளில் முழுநேரமும் வகுப்புகள் நடத்த முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் ருத்ரகவுடு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் நாளை (புதன்கிழமை) முதல் முழு நேரமும் செயல்படும். வழக்கமான கால அட்டவணையை பின்பற்றி வாரத்தில் 6 நாட்களும் (திங்கள் முதல் சனிக்கிழமை) முழு நேர வகுப்புகள் நடத்தப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.