தமிழகத்தில் உள்ள பள்ளிகள் காலதாமதமாக திறப்பதால் பாடங்களை குறைக்கத் திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வருகின்ற ஜூன் மாதத்தில் திறக்கவிருந்த பள்ளிகள் கொரோனா பாதிப்பின் தீவிரத்தால் ஆகஸ்ட் மாதத்துக்கு ஒத்திவைக்க தமிழகத்தின் பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆகையால் மாணவர்களுக்கான பாடங்களை குறைக்கப்போவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

தமிழகத்தில் தீவிரமடைந்துவரும் கொரோனா பாதிப்பால் தமிழகப்பள்ளிகளை அடுத்தமாதம் திறப்பது என்பது சாத்தியமற்றது. அதோடு மாணவர்களை நெருக்கமாக அமரவைத்து பாடங்களை எடுப்பதும் சிரமம் என்பதால் காலைவேளை 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், பிற்பகல் வேளையில் 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் என பிரித்து வகுப்புக்கள் ஆரம்பிக்க பள்ளிக்கல்வித்துறை பரிசீலித்து வருகிறது.

வரும் கல்வியாண்டில் இந்த காலதாமதத்தின் காரணமாக வழக்கமாக பாடங்களை நடத்தி முடித்து உரிய காலத்தில் தேர்வுகள் நடாத்துவது சவாலானதாக அமையும்.

இது இவ்வாறு இருக்க 1 முதல் 8ம் வகுப்பு வரை நடைமுறையில் உள்ள முப்பருவ பாட முறையில் மாற்றங்கள் ஏற்படலாம் என்பதால் முதலாம் பருவ பாடத்தை கைவிடுவது என்றும் பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடங்களின் எண்ணிக்கை சுமையை கூட்டும் என்பதால் அப்பாடத்திட்டங்களும் குறைக்கப்படலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொதுத் தேர்வுகள் நெருங்கிவரும் நிலையில் மாணவர்களை குறுகிய காலப்பகுதிக்குள் தயார்படுத்த வேண்டிய சூழலும் உருவாகியிருப்பது இந்த பாடத்திட்டங்கள் குறைப்பு காரணமாகிறது.

தற்போது காலதாமதமாகும் பள்ளிகள் திறப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு எடுக்கப்படலாம் என பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.