சிறிது காலத்திற்கு சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டாலும் கிராமிய பொருளாதாரத்திற்கு வலுசேர்த்து விவசாயிகளை கட்டியெழுப்ப எடுத்த தீர்மானத்தில் இருந்து பின்வாங்குவது இல்லையென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உப குழுவின் முதலாவது கூட்டத்திலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது நாடு பூராவும் உள்ள பொருளாதார மத்திய நிலையங்களை சரியான பொறிமுறையின் கீழ் கொண்டு வந்து விவசாய விளைச்சல்களை கொள்வனவு செய்வதற்கான பொறிமுறை ஒன்றை உருவாக்குவது தொடர்பாகவும் வாழ்க்கை செலவு உபகுழு கலந்துரையாடியது.
எனவே சந்தை நிலைமைகள் தொடர்பாக வாரத்திற்கு ஒரு தடவை தனக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
மேலும் அந்நிய செலாவணியைக் கட்டுப்படுத்தவும் கடன் சுமையில் இருந்து விடுபடவும் இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கொரோனா தொற்றினால் இறக்குமதியை கட்டுப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
கிராமிய மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதுடன், நகர மக்களை வாழ்க்கைச் சுமையில் இருந்து விடுவிக்கும் நடவடிக்கைகள் ஒரே சந்தர்ப்பத்தில் முன்னெடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.