ஒருவரது முகத்திற்கு புருவங்கள் தான் ஒரு நல்ல தோற்றத்தைத் தருகின்றன. இப்படிப்பட்ட புருவங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக இருக்கும். அதில் சிலருக்கு ஒல்லியாகவும், சிலருக்கு தடிமனாகவும், சிலருக்கு குட்டையாகவும், இன்னும் சிலருக்கு நீளமாகவும் இருக்கும். ஆனால் இப்படிப்பட்ட புருவங்களின் வடிவங்களைக் கொண்டு ஒருவரைப் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ள முடியும் தெரியுமா?

இப்படி ஒருவரது முகத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்களின் வடிவம், அளவு ஆகியவற்றைக் கொண்டு ஒருவரது தன்மையைப் பற்றி புரிந்து கொள்ளவும், அவரது விதி, ஆளுமை பண்புகளைப் பற்றிய தகவலைப் பெற உதவும் நடைமுறை தான் ஃபேஸ் ரீடிங் என்னும் முக வாசிப்பு. இதைக் கொண்டு ஒருவரது கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் போன்றவற்றைக் கூட அறிய முடியும்.

பொதுவாக புருவங்களானது நீண்ட ஆயுளின் உறுப்பாக கருதப்படுகிறது மற்றும் இது ஒருவரது ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுடன் தொடர்புடையது இப்போது ஃபேஸ் ரீடிங்கில் ஒவ்வொருவிதமான புருவத்திற்கும் பின்னிருக்கும் அர்த்தம் என்னவென்பதைக் காண்போம்.

வளைந்த புருவங்கள்

வளைந்த புருவங்களைக் கொண்டிருப்பவர்கள் உறுதியானவர்கள். எதற்கும் விரைவாக நடவடிக்கை எடுப்பார்கள். அதுவும் சமநிலையான வளைந்த புருவங்களைக் கொண்டவர்கள் நடவடிக்கையை எடுக்கும் முன் தங்களின் விருப்பங்களை மற்றவர்கள் கேட்க விரும்புவார்கள். அதுவும் லேசாக வளைந்த புருவங்களைக் கொண்டிருப்பவர்கள், விரைவாக சிந்தித்து உடனடியாக முடிவுகளை எடுப்பார்கள். அதுவே நன்கு வளைந்த புருவங்களைக் கொண்டிருப்பவர்கள் கட்டுப்பாட்டுடன் இருப்பதை விரும்புவார்கள். இதனால் இவர்கள் பொறுப்பேற்கக்கூடிய தொழிலை செய்ய விரும்புவார்கள். மேலும் இவர்கள் மிகவும் தன்னம்பிக்கை கொண்டிருப்பார்கள் மற்றும் சிறந்த சமூக திறன்களைக் கொண்ட நல்ல தலைவர்களாக இருப்பர்.

நேரான புருவங்கள்

நேரான புருவங்களைக் கொண்டவர்கள் ஒரு முடிவு எடுக்க அதிக நேரத்தை எடுப்பார்கள். மிகவும் பகுப்பாய்வு மற்றும் பகுத்தறிவு கொண்டவர்கள். மேலும் இவர்கள் பெரும்பாலும் தங்களைப் பற்றி அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பார்கள் மற்றும் நேர்மறை ஊக்கத்தால் செழித்திருப்பார்கள். முக்கியமாக இவர்கள் தங்கள் உணர்ச்சிகளால் ஆளப்படுவதில்லை. உண்மைகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க விரும்புவார்கள்.

அடர்த்தியான புருவங்கள்

அடர்த்தியான புருவங்களைக் கொண்டவர்கள் இயற்கையான அழகிகள். சுதந்திரமான மனநிலையைக் கொண்டிருப்பார்கள். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று யோசிக்காமல், தங்களுக்கு பிடித்தவாறு வாழ்க்கையை வாழ விரும்புவார்கள். ரிஸ்க்குகளை எடுக்க தயங்கமாட்டார்கள். தங்களின் திட்டம் தோல்வியடைந்தால், அதைப் பற்றி சிறிதும் பயப்படமாட்டார்கள். மொத்தத்தில் இவர்கள் உலகின் மிகவும் ஆக்கப்பூர்வமான நபர்களாகக் கருதப்படுகிறார்கள்.

மெல்லிய புருவங்கள்

மெல்லிய புருவங்களைக் கொண்டவர்கள் சற்று குறைந்த தன்னம்பிக்கை கொண்டவர்களாக கருதப்படுகிறார்கள். ஆனால் உண்மையில் அது நிஜமல்ல. இவர்கள் பெரும்பாலும் தங்கள் நம்பிக்கையை வித்தியாசமாக வெளிப்படுத்துவார்கள். மேலும் இவர்கள் ஒரு முடிவை எடுப்பதில் சிரமப்படுவார்கள். இதன் காரணமாக முடிவை எடுக்க மற்றவர்களின் உதவியை நாடுவார்கள். இப்படியான புருவங்களைக் கொண்டவர்கள் தலைமை பதவிகளை பெறுவதற்கு பதிலாக, அதற்கு கீழே தான் வேலை செய்ய விரும்புவார்கள். இவர்கள் கூச்ச சுபாவமுள்ளவர்களாகவும் உள்முக சிந்தனையுடையவர்களாகவும் வெளிப்பட்டாலும், பெரும்பாலும் புத்திசாலிகள் மற்றும் இரக்கமுள்ளவர்கள்.

நீண்ட புருவங்கள்

நீண்ட புருவங்களைக் கொண்டவர்கள் அதிக வலிமை மற்றும் மீள்தன்மை கொண்டவர்களாக கருதப்படுகிறார்கள். மேலும் இவர்கள் மன அழுத்தத்தை மிகவும் சிறப்பாக கையாளும் திறன் கொண்டவர்கள். இதன் காரணமாக இவர்கள் எப்பேற்பட்ட சூழ்நிலையையும் எளிதில் சிரமமின்றி கையாள்வார்கள்.

குறுகிய புருவங்கள்

குறுகிய புருவங்களைக் கொண்டவர்களால் சிறு பிரச்சனைகளையும் கையாள்வது என்பது கடினம். இவர்கள் அதிக நண்பர்களை விட குறைவான அளவிலேயே நண்பர்களை வைத்துக் கொள்ள விரும்புவார்கள். இவர்களுக்கு உதவும் மனப்பான்மை சிறிதும் இல்லை. இவர்கள் தங்களிடம் நடிப்பவர்களை எளிதில் அடையாளம் காண்பார்கள். எனவே இவர்களை நடித்து ஏமாற்றிவிடலாம் என்று நினைத்துவிடாதீர்கள்.

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை