பச்சைக் காய்கறிகளை தகுந்த பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி பத்திரமாக வைத்திருக்காவிட்டால், அவை விரைவில் அழுகிவிடும். பெரும்பாலும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சேமித்து வைத்திருக்கும் இடம் சரியாக இல்லையென்றால் அவை விரைவில் கெட்டுவிடும்.
பிஸியான வாழ்க்கை முறையால், தினமும் சந்தையில் இருந்து புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்குவது எளிதான காரியம் அல்ல. அதனால்தான் பலர் ஒரே நேரத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்கி குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைப்பார்கள்.
சில சமயம் காய்கறிகள், பழங்கள் வாங்கினால் சில நாட்கள் வெளியே செல்ல வேண்டும் அல்லது வேலை அழுத்தம் காரணமாக உடனே பயன்படுத்த முடியாது. அத்தகைய சூழ்நிலையில், பெரும்பாலும் இந்த காய்கறிகள் மற்றும் பழங்கள் அழுகும் மற்றும் நேராக குப்பைக்குச் செல்கின்றன அல்லது வீட்டுப் பணியாளர்கள் மற்றும் அண்டை வீட்டாருக்கு வழங்கப்படுகின்றன.
அப்படிப் பகிர்வதில் எந்தத் தீங்கும் இல்லை என்றாலும், ஒவ்வொரு முறையும் இவ்வாறு செய்வதால் உங்கள் நேரத்தையும், உழைப்பையும் வீணடிப்பது மட்டுமின்றி, உங்கள் பணமும் வீணாகிவிடும் என்பதால், கொஞ்சம் புத்திசாலித்தனமான விஷயங்களை செய்வது நல்லது. உங்களுக்குத் தேவையானதை விட அதிக காய்கறிகளை வாங்குவீர்கள் என்றால் இது உங்களுக்கான பதிவுதான்..
1. பழங்கள் மற்றும் காய்கறிகளை புதியதாக வைத்திருக்க, அவற்றை குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். ஆனால் சில நேரங்களில் அவை குளிர்ந்த பிறகும் சேதமடைகின்றன. எனவே பழங்கள் மற்றும் காய்கறிகளை நீண்ட காலம் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க சில எளிய குறிப்புகளை அறிந்து கொள்வோம். நீங்கள் பழங்களைச் சேமிக்க வைக்க விரும்பினால், குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதற்கு முன் அவற்றை டிஷ்யூ பேப்பரில் போர்த்தி வைக்கவும். இதற்குப் பிறகு, குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.
2. பழங்கள் மற்றும் காய்கறிகளை சேமித்து வைப்பதற்கு முன் நன்கு கழுவவும். சமையலறை துண்டு அல்லது சுத்தமான துணியால் உலர வைக்கவும். இவ்வாறு செய்வதால் அவை நீண்ட நேரம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
3. பச்சைக் காய்கறிகள் நீண்ட நேரம் புத்துணர்ச்சியுடன் இருக்க செய்தித்தாளில் சுற்றி வைக்கவும். உண்மையில், இது காய்கறிகளின் அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சி, அவை கெட்டுப்போகாமல் தடுக்கிறது.
4. ஆப்பிளை நீண்ட நேரம் சேமித்து வைக்க விரும்பினால், அதை மெஷ் பையில் போட்டு குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். மஞ்சள் பை இல்லை என்றால், சிறிய துளைகள் உள்ள பிளாஸ்டிக் பையில் போடலாம்.
5. வாழைப்பழம் ஃப்ரிட்ஜில் வைத்தால் சீக்கிரம் கெட்டுவிடும். காற்றுப் புகாத பிளாஸ்டிக் பையில் அடைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதன் மூலம் கெட்டுப் போகாமல் பாதுகாக்கலாம்.
6. நீங்கள் வெங்காயம் மற்றும் பூண்டை சேமிக்க விரும்பினால், அவற்றை திறந்த மற்றும் காற்றோட்டமான இடத்தில் வைக்கவும். தவறுதலாக கூட வெயில் படும் இடத்தில் வைக்காதீர்கள், இல்லையெனில் அவை விரைவில் கெட்டுவிடும்.
7. கருணைக்கிழங்கு, பீட்ரூட், சேனைக்கிழங்கு போன்ற வேர் காய்கறிகளை கழுவிட்டு பிளாஸ்டிக் பைகளில் அடைத்து வைக்கலாம். காற்று புகுமாறு ஓட்டை போட்டு வையுங்கள்.
8. அனைத்து காய்கறிகளையும் ஒரே பையில் போட்டு வைக்கக் கூடாது. தனித்தனியாக பராமரிக்க வேண்டும்.
9. பச்சை மிளகாய், கத்தரிக்காய், முள்ளங்கி போன்ற காம்பு, இலை கொண்ட காய்கறிகளை அதன் தலையை வெட்டிவிட்டு சேமித்து வையுங்கள். முருங்கைக்காயையும் துண்டுகளாக நறுக்கி வையுங்கள்.
10. வெண்டைக்காய், அவரக்காய், பீன்ஸ், குடை மிளகாய் போன்ற பச்சை நிறக் காய்கறிகளை நீண்ட நாட்கள் சேமித்து வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். அதிகபட்சமாக 2 அல்லது 3 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்.
முடிந்த வரை அதிகமாக சேமித்து வைக்கும் பழக்கத்தை தவிர்த்துவிடுதல் நல்லது. குறைந்தது இரண்டு நாட்கள் சேமிக்கலாம். புதிதாக சந்தைக்கு வரும் காய்கறிகள், பழங்களை சுவைத்தலே ருசியும் ஆரோக்கியமும் கிடைக்கும்.