``அமெரிக்காவுடனான மோதல், இந்தியா மற்றும் சீனா எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றம், தைவான் புரட்சி, ஹாங்காங் போராட்டம் என சீனா பல சிக்கல்களைச் சந்தித்து வருகிறது.
சீனாவில் உருவானதாகக் கருதப்படும் கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகள் பலவற்றிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அந்நாட்டில் வைரஸ் பாதிப்பு குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் நிலையில், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமலும் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாமலும் பல நாடுகள் திணறி வருகின்றன.
இத்தகைய சூழ்நிலைக்கு சீனாதான் காரணம் என அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றன. இதையடுத்து இந்தியா மற்றும் சீனா எல்லைப் பகுதியில் பதற்றம், தைவான் புரட்சி, ஹாங்காங் போராட்டம் என சீனா பல சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் `போருக்குத் தயாராகுங்கள்’ என ராணுவ வீரர்களிடம் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீன ராணுவம்
ஜி ஜின்பிங், தனது வாழ்நாள் முழுவதும் ஆட்சியில் இருப்பதற்கான வாய்ப்புகளைக் கொண்டிருப்பவர். தற்போது சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராகவும் 20 லட்சத்துக்கும் அதிகமான ராணுவ வீரர்களைக் கொண்ட ராணுவத்தின் தலைவராகவும் அவர் விளங்குகிறார். பெய்ஜிங்கில் தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் வலிமையான ராணுவ மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளின் முன்பு அவர் உரையாற்றியதாகக் கூறப்படுகிறது. மிகவும் மோசமாக உள்ள சூழ்நிலைகளைக் கையாளவும் உடனடியாக அதைப் பற்றி சிந்தித்து முடிவெடுக்கவும் வீரர்கள் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அக்கூட்டத்தில் ஜி பேசியுள்ளார்.
எந்த நாடுகளையும் குறிப்பிடாமல் தொடர்ந்து பேசிய அதிபர் ஜி ஜின்பிங், ``ராணுவப் படைகள் பயிற்சியை வலுப்படுத்த வேண்டும். அசாதாரண சூழ்நிலைகள் நிலவி வருவதால் போருக்குத் தயாராக இருக்க வேண்டும். நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, மேம்பாட்டு நலன்களை உறுதியுடன் பாதுகாக்க வேண்டும். கொரோனா வைரஸை எதிர்த்து போராடியதில் ராணுவத்தின் பங்கு முக்கியமானது. ஆயுதப் படைகள் புதிய வழிகளில் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ராணுவ சீர்திருத்தத்துக்கான நடைமுறை சோதனைதான் இந்த நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பான போராட்டங்கள். இது ராணுவத்தில் புதிய சீர்திருத்தத்துக்கான தேவைகளை முன்வைக்கிறது” என்று கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
சீனா - அமெரிக்கா
`சீனா இழப்பீடு வழங்க வேண்டும், அந்நாட்டின் மீது விசாரணைகளை நடத்த வேண்டும், சீனாவின் திறமையின்மையே எல்லாவற்றுக்கும் காரணம்’ என அமெரிக்கா தொடர்ந்து குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகிறது. இதையடுத்து, சீனக் கடல் பகுதிகளில் அமெரிக்கா ரோந்துப் பணிகளை மேற்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் உயர் அதிகாரியான வாங் யி சில நாள்களுக்கு முன்பு, அமெரிக்க அரசியல்வாதிகள் வதந்திகளைப் பரப்புவதாகவும் ட்ரம்பின் குற்றச்சாட்டுக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்களை எழுப்பினார். அமெரிக்கா, சீனா உடனான உறவை பனிப்போர் நிலைக்குத் தள்ளுவதாகவும் வாங் தெரிவித்தார். இதனால், அமெரிக்காவுடனான சீனாவின் மோதல் தீவிரமடைந்துள்ளது.
தைவானில் சீனாவுக்கு எதிராகப் புரட்சியும் நடைபெற்று வருகிறது. ஆனால் சீன அரசானது, தைவான் சீனாவின் ஒரு பகுதியாகவே இருந்து வரும் என்றும் மற்ற நாடுகள் இந்த விவகாரத்தில் தலையிடும் பட்சத்தில் சீனா தனது ராணுவத்தை பயன்படுத்த ஒருபோதும் தயங்காது என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்தப் பதற்றமும் தற்போது அதிகமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், சீனாவில் புதிய பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங்கில் நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனாலும் சீனா கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இதற்கிடையே, கடந்த சில நாள்களாக இந்திய சீன எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.
இந்தியா-சீனா
லடாக் பகுதியில் உள்ள இந்திய மற்றும் சீன எல்லைப் பகுதியில் இருநாடுகளும் தங்களது ராணுவப் படைகளை அதிகரித்து வருகின்றன. இதனிடையே, நேற்று பாங்கோங் ஏரி அருகே உள்ள எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தினர் இந்திய ராணுவ வீரர்கள் மீது முறையற்ற தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்கள் கைகளில் துப்பாக்கிகள் உள்ளிட்ட அனைத்து ராணுவ உபகரணங்கள் இருந்தும் இந்தியா ராணுவத்தின் மீது, கற்கள், கம்பு, முள்வேலி கம்பிகள் முதலியவற்றை எறிந்து தாக்குதல் நடத்தியதாக ஏ.என்.ஐ ஊடகம் தெரிவித்திருக்கிறது. இதுவும் இந்தியா மற்றும் சீனா இடையேயான பதற்றத்தை அதிகரித்துள்ளது.
சீனாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியாவும் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு ஒருபுறம் அதிகரித்துக் கொண்டிருக்கும்போது மறுபுறம் நாடுகளுக்கு இடையேயான பிரச்னைகளும் தீவிரமாக அதிகரித்து வருவது சர்வதேச அளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.