பொதுவாகவே அனைவரும் வாழ்வில் மகிழ்சியாக இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள்.ஆனால் இது சொல்வதை போன்று அவ்வளவு சுலபமான விடயம் கிடையாது.
தொழிநுட்ப மயமான உலகில் அதிகரித்த வேலைபளு, படிப்பு, குடும்ப பிரச்சினை, வாழ்க்கை செலவு என நம்மை தினசரி மன அழுத்தத்துக்கு உள்ளாக்கும் விடயங்கள் ஏராளம் இருக்கின்றது.
இந்த வகையில் நாம் வாழ்வில் மகிழ்ச்சியடைய வேண்டும் என்றால் நாம் சில முக்கிய விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.இந்த விடயங்கள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
நம் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைச் செய்வதே மகிழ்ச்சிக்கான திறவுகோல் என நம்மில் பெரும்பாலானோர் நினைத்துக்கொண்டிருப்போம்.
ஆனால், நாம் அனைவரும் கண்டிப்பாக மனதில் நிலை நிருத்திக்கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால் அன்றாடம் செய்யும் சின்ன சின்ன விடயங்களில் கூட மகிழ்ச்சியடைய முடியும் என்பது தான் உண்மை.
தற்காலத்தில் அனைவருமே சமூக வலைத்தளங்களில் மூழ்கி இருப்பதால் யாரும் பிறருக்காக நேரம் ஒதுக்கவோ, மனம் விட்டு பேசவோ பெரும்பாலும் விரும்புவதில்லை. ஆனால் இது தான் நமது மன அழுத்தத்துக்கு முக்கிய காரணம்.
குடும்ப உறுப்பினர்கள் அல்லது மனதுக்கு பிடித்தவர்களுடன் அன்றாடம் நேரம் ஒதுக்கி பேசுவதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். மன அழுத்தம் குறைந்து மனம் அமைதியடைய இது பெரிதும் துணைப்புரியும்.
உடற்பயிற்சி
எப்போதும் உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமன்றி உள ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாதது.
உடற்பயிற்சிகளில் ஈடுப்படும் போது மன நிலையும் ஆரோக்கியமாக இருக்கும். ஸ்விம்மிங், சைக்கிளிங், வாக்கிங், ஜாகிங் ஆகியவற்றை வழக்கமாக மேற்கொள்வதால் மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முடியும்.
புது விஷயங்களை கற்றுக்கொள்வது
புதுப்புது விஷயங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவது மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும். இதனால் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
மேலும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள முயற்சிக்கும் போது, தானாகவே புதிய மனிதர்களிடம் பழகும் வாய்ப்பு கிடைக்கும். இதனால் மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முடியும்.
பரிசளிப்பது
மற்றவர்கள் நமக்கு பரிசு கொடுக்கும் போது எவ்வளவு மகிழ்ச்சியை கொடுக்கிறதோ அதேபோல் தான் பிறருக்கு நீங்கள் பரிசளிக்கும் போது அதே அளவு மகிழ்ச்சியை பெற முடியும்.
அடிக்கடி மனதுக்கு பிடித்தவர்களுக்கு குட்டி குட்டி பரிசுகளை கொடுப்பது அவர்களை மட்டுமல்ல உங்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.
நிகழ்காலத்தில் மனதை வைத்துக்கொள்வது
பொரும்பாலும் மனிதர்களின் மகிழ்ச்சியை பாதிக்க கூடிய விடயம் என்னவென்றால்,நடந்து முடிந்த விஷயங்களை நினைத்து கவலைப்படுவதும் எதிர்காலத்தை நினைத்து பயம் கொள்வதும் தான்.
எப்போதோ செய்த தவறை எண்ணி இன்று வரை வருந்துவதில் எவ்வித பயனும் இல்லை. அதேபோல் எதிர்காலத்தை நினைத்தும் கவலை அல்லது பயம் கொள்வதும் மன அழுத்தத்திற்கே வித்திடும்.
எனவே எப்போதும் மனதை நிகழ்காலத்தில் வைத்திருக்க முயற்ச்சி செய்தாலே போதும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.