பொதுவாகவே கோடை காலம் வந்துவிட்டால் தர்பூசணியின் வருகையும் கூடவே ஆரம்பித்துவிடும். தர்பூசணியானது அதிகளவான நீர்ச்சத்து கொண்டிருப்பதால் உடலை போதுமான அளவு நீர்சத்துடன் வைத்திருக்கும்.
மேலும், தர்பூசணியில் அதிக வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. இது எமது உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு மிக முக்கியமான ஊட்டச்சத்தை அதிகம் கொண்டிருக்கிறது.
இதில், ஏராளாமான நன்மைகள் நிரம்பியிருப்பதால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகிறார்கள். தர்பூசணி சாப்பிடுவதை விரும்பாத ஒருவரைக் கண்பது கடினம் என்றால் மிகையாகாது.
தர்பூசணி ஏராளமான சுகாதார நன்மைகளால் நிரம்பியுள்ளது. இதில் இயற்கையாகவே நீர் உள்ளடக்கம் உள்ளது. மேலும், சக்திவாய்ந்த ஊட்டச்சத்து மற்றும் பொட்டாசியம் மற்றும் லைகோபீன் போன்ற தாதுப்பொருட்களால் இது நிறைந்துள்ளது.
இவ்வளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த பழத்தை இரவில் சாபப்பிடலாமா? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த இந்த பழத்தில் விட்டமின் சி, ஏ , பி6 ஆகியன நிறைந்து காணப்படுகின்றது. இது இரத்த சர்க்கரை அளவை குறைக்க பெரிதும் துணைப்புரிகின்றது.
இதில் லைகோபீன் அதிகமாக இருப்பதால் கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கோடைக்காலத்தில் ஏற்படும் கண் எரிச்சல், கண் சூட்டை குறைக்க பெரிதும் உதவுகின்றது. அதிகமாக கணினியில் வேலை பார்ப்பவர்கள் இதனை அடிக்கடி சாப்பிடுவது சிறந்தது.
92 சதவீதம் தண்ணீரை உள்ளடக்கிய தர்பூசணியை கிராம புறங்களில் தண்ணீர் பழம் என்றே அழைப்பார்கள். இது கோடை காலத்தில் உடலுக்கு போதுமான நீர்ச்சத்தை தருகிறது.
இதில் நார்ச்சத்து நிறைவாக இருப்பதால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும். இதனால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம்.
இரவில் தர்பூசனி பழம் சாப்பிடலாமா என்பதற்கு இதுவரை அறிவியல் பூர்வமான சரியான ஆதாரங்கள் எதுவும் இல்லை. அதேசமயம் சாப்பிடக்கூடாது என்றும் மருத்துவர்கள் குறிப்பிட்டதாக பதிவுகள் மற்றும் ஆதாரங்கள் இல்லை.
ஆனால் தூங்குவதற்கு அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்திற்கு முன் சாப்பிடுவது சிறந்தது. இரவில் தர்பூசணி சாப்பிடுவது உடலின் நீரேற்றத்தை தக்க வைக்க உதவுகிறது. ஆனால் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் வெளியேற்ற வேண்டி ஏற்படலாம்.
நெஞ்சு எரிச்சல், வயிறு எரிச்சல், செரிமான பிரச்சனையும் உள்ளவர்கள் இரவில் தர்பூசணி சாப்பிட கூடாது என ஆயுர்வேதத்தில் அறிவுறுத்தப்படுகின்றது.
எனவே உடல் நலப்பிரச்சனைகள், சைனஸ், வீசிங் பிரச்சனை போன்ற ஆரோக்கிய பிரச்சினை இருப்பவர்கள் மருத்துவ ஆலோசனையின் பின்னர் இதனை இரவில் சாப்பிடுவது நல்லது.