அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை விமர்சையாக நடைபெற உள்ளது.  ராமபிரானின் சிறப்புகளையும், அயோத்தியில் கட்டப்படும் கோவிலின் பெருமைகளையும் குறித்த ஒரு செய்தி தொகுப்பு....

தீமையை ஒழித்து நீதியை நிலை நாட்டுவதற்காக மனிதனாக விஷ்ணு எடுத்த ஏழாவது அவதாரமே ராமர் அவதாரம் என்பதே இந்துக்களின் நம்பிக்கை. வால்மீகி இயற்றிய  இராமாயணத்தின்படி கோசல நாட்டின் தலை நகரமான அயோத்தியைச் சேர்ந்த ரகு வம்சத்தில் ராமர் பிறந்தார்.

ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும்,  ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும்.

இந்துக்களின் தெய்வமாக வணங்கப்படும் ராமனுக்கு அயோத்தியில் கட்டப்பட உள்ள கோவிலின் மாதிரி வெளியாகியுள்ளது. அயோத்தியில் மொத்தம் 67 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமாக கோவில் அமையவுள்ளது.

நகரா என்ற கோவில் கட்டிடக் கலை பாணியில் ராமர்கோவில் கட்டப்பட உள்ளது. இதில் 10 ஏக்கரில் கோயிலும், மீதமுள்ள 57 ஏக்கர் கோயில் வளாகமாகவும் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 161 அடி உயரம், மூன்றடுக்கு, 5 மண்டபங்கள், ஒரு கோபுரத்தை கொண்டதாக இக்கோயில் வடிவமைக்கப்பட உள்ளது. இதேபோன்று இந்தக் கோயிலில் அமையவுள்ள மொத்த தூண்களின் எண்ணிக்கை 360. 

300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராமருக்கு கோயில் கட்டப்பட உள்ளது. பிரபல கட்டட கலை நிபுணரான சந்திரகாந்த்பாய் சோம்புரா தான், அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணியின் தலைமை கட்டட கலைஞராக செயல்படவுள்ளார்.

ராஜஸ்தானில் இருந்து கொண்டு வரப்படும் மலைக்கற்களை தவிர, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், கடந்த 30 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்டுள்ள 2 லட்சம் கற்களும் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளன. அயோத்தியில் பிரம்மாண்டமாக அமையவுள்ள ராமர் கோயிலை முழுவதுமாக கட்டி முடிக்க குறைந்தப்பட்சம் மூன்றரை ஆண்டுகள் ஆகுமென இந்தக் கட்டுமான திட்டத்தின் தலைமை கட்டட கலைஞரான சந்திரகாந்த்பாய் சோம்புராவின் மகன் ஆசிஷ் சோம்புரா தெரிவித்துள்ளார்.