பீகார் அரசு ஆஸ்பத்திரியில் உயிருடன் உள்ள கொரோனா நோயாளியை இறந்ததாக கூறி மற்றொருவர் உடலை ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தில் உள்ள மக்மத்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர், சுன்னு குமார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர், பாட்னா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம், சுன்னு குமார் இறந்துவிட்டதாக அவரது சகோதரரிடம் தெரிவித்த ஆஸ்பத்திரி நிர்வாகிகள், இறந்த வேறொருவரின் உடலை அவரிடம் ஒப்படைத்தனர். அதைப் பார்த்து சுன்னு குமாரின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த விஷயம் பற்றி கேள்விப்பட்டதும் பாட்னா மாவட்ட மாஜிஸ்திரேட்டு, அரசு ஆஸ்பத்திரி நிர்வாகிகளுக்கு கடிதம் எழுதினார். அதில், இந்த விஷயம் குறித்து விசாரித்து, தவறுக்கு காரணமானவர்கள் மீது 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளார். மீண்டும் இதுபோன்ற தவறு நடக்காமல் பார்த்துக்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.