இந்த பிரபஞ்சம் நம் எண்ணங்களை எப்போதும் கவனித்துக் கொண்டே இருக்கும். இதனால் தான் நம் முன்னோர்கள் எண்ணம் போல் வாழ்க்கை என சொல்லி வைத்திருக்கின்றார்கள். ஆம் நாம் எதை நினைக்கின்றோமோ அதுவாகவே மாறிவிடுவோம் என்பது நிதர்சனம்.
பொதுவாக நமக்கு ஏதாவது விதத்தில் பணம் வருகின்றது என்றால் மனம் தானாகவே மகிழ்ச்சியில் இருக்கும். ஆனால் பலரும் அந்த பணத்தை செலவு செய்யும் போது மகிழ்ச்சியாக இருப்பதில்லை, இதுவே நம் கையில் பணம் தங்காதமைக்கு முக்கிய காரணமாகும்.
உண்மையில் நாம் கொடுப்பதை இரட்டிப்பாக திருப்பிக்கொடுக்கும் சக்தி இந்த பிரபஞ்சத்துக்கு உண்டு. நாம் சம்பாதிக்கும் பணத்தில் சிறிய அளவிலாவது தர்மம் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள் உதாரணமாக ஆட்டோவில் பயணிக்கும் போது மீற்றருக்கு மேல் 10ரூபாயாவது அதிகமாக கொடுக்கலாம்.
மாதம் ஒருமுறையாவது ஏழ்மையில் இருக்கும் ஒரு குடும்பத்திற்கு நல்ல உணவு வாங்கிக்கொடுக்கலாம், இவ்வாறான விடயங்களை மகிழ்ச்சியாக செய்யும் போதும் அந்த மகிழ்ச்சியான எண்ணம் நம்மிடம் அதிக பணத்தை கொண்டுவந்து சேர்க்கும்.
நாம் சொந்த தேவைக்காக அதிகளவில் பணத்தை செலவிடும் போதும் பணத்தை இழக்கின்றோமே என்ற எண்ணம் துளிகூட இல்லாமல் இவ்வளவு பெரிய செலவை செய்வதற்கு என்னிடம் பணம் இருக்கிறதே என்ற மகிழ்ச்சியோடு அந்த பணத்தை வாழ்த்தி செலவு செய்து பாருங்கள், நீங்கள் செலவு செய்த பணம் உங்களிடம் இரட்டிப்பாக திரும்பிவரும்.
இயற்கையில் அனைத்தும் கொடுக்கும் தன்மையில் தான் இருக்கின்றது. அதனால் தான் அவை மீண்டும் மீண்டும் உருவாகிக்கொண்டே இருக்கின்றது. அதனால் தான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கின்றது.இதை முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும்.
நாம் கொடுக்கும் தன்மைக்கு எப்போது வருகின்றோமோ அப்போது நம்மிடம் எதுவும் குறையாது என்பது மறுக்க முடியாத உண்மை.
அதை மட்டும் நீங்கள் புரிந்து கொண்டால் பணத்தை தேடி நீங்கள் போக வேண்டியதே இல்லை பணம் உங்களை தேடி வர ஆரம்பித்துவிடும். இதுவே இயற்கையின் நியதி.