பொதுவாகவே பெண்களுக்கு தங்களை அழகுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கும். இதற்காக பெண்கள் எப்போதும் பல்வேறு முயற்சிகளை செய்வது வழக்கம்.
ஆனால் தற்காலத்தில் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசு மற்றும் இரசாயனம் கலந்த அழகுசாதன பொருட்களின் பாவனை ஆகியவற்றின் காரணமாக முகத்தை பராமரிப்பது சவாலான விடயமாக மாறிவிட்டது.
எதுவிதமான இரசாயனமும் கலக்காமல் முகத்தை பொலிவாகவும், முகப்பருக்கள் இன்றியும் பாதுகாக்க வீட்டிலேயே இயற்கையான முறையில் ஸ்க்ரப் தயாரிப்பது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
500 கிராம் பச்சைபயறு
50 கிராம் ரோஜா இதழ்
50 கிராம் கஸ்தூரி மஞ்சள்
செய்முறை
பச்சை பயறு மற்றும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய ரோஜா இதழ்கள்(வீட்டிலேயே கிடைக்கக்கூடிய ரோஜா பூக்களை வெயிலில் காயவைத்தும் பயன்படுத்தலாம்) கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து வெயிலில் ஒரு நாள் வரை உலரவைக்க வேண்டும்.
பின்னர் இந்த முன்றின் கவவையையும் மிக்சியில் போட்டு ரொம்பவும் வழுவழுப்பாக இல்லாமல் சற்று சொரசொரப்பான பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் அதனை காற்று உட்புகாத ஒரு போத்தலில் பத்திரப்படுத்தி ஒரு மாதம் வரையில் பாவிக்கலாம்.
முகத்தை நன்கு சுத்தமாக கழுவிய பின்னர் அந்த ஈரப்பதத்துடன் இந்த மாவை முகத்தில் தடவி 5 நிமிடங்கள் வரை மெதுவாக மசாஜ் செய்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் உடனடியாக பொலிவு பெரும்.
இந்த கலவை இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டது என்பதால் எதுவித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது.
தினசரி பயன்படுத்துவதால் முகப்பருக்கள் வராமல் தடுக்கின்றது, மேலும் ஏற்கனவே காணப்படும் முகப்பருக்களின் வடுக்கள் மற்றும் கரும்புள்ளிகளையும் குறைக்கின்றது.
தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது முகம் இயற்கையாக சிகப்பழகு பெறுவதுடன் பளபளப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் முகத்தை பாதுகாக்க துணைபுரிகின்றது.