நியூசிலாந்தில் நிலநடுக்கம் குறுக்கிட்டபோதிலும் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அசராமல் தனது தொலைக்காட்சி நேர்காணலை நிறைவு செய்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. நிலநடுக்கத்திலும் அசராமல் நேர்காணலை முடித்த நியூசிலாந்து பிரதமர் நிலநடுக்கம் ஏற்பட்டபோது பிரதமரின் ரியாக்சன் வெலிங்டன்: நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் இன்று பாராளுமன்றத்தில் இருந்தபடி, தொலைக்காட்சி நேர்காணலில் பங்கேற்று பேசினார். அப்போது திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
அவருக்கு பின்னால் இருந்த திரை மற்றும் பொருட்கள் அதிர்ந்தன. எனினும் ஜெசிந்தா பதற்றப்படாமல் தொடர்ந்து தனது நேர்காணலை தொடர்ந்தார். தனக்கு பின்னால் இருக்கும் பொருட்கள் அசைவதைப் பார்த்தும் அச்சம் இன்றி, முகத்தில் புன்னகையுடன் பேசிய அவர்,
‘இங்கு நாம் லேசான நிலநடுக்கத்தை உணர்ந்து இருக்கிறோம்’ என்றார். சிறிது நேரத்தில் நில அதிர்வு நின்றது. தொடர்ந்து பேசிய ஜெசிந்தா, நேர்காணலை முழுமையாக முடித்தார். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆகப் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது பிரதமர் காட்டிய ரியாக்சன் மற்றும் அவரது தைரியத்தை பாராடும் மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. நிலநடுக்கம் ஏற்பட்டபோதும் நேர்காணலில் கவனம் செலுத்திய அவரது திறனை மக்கள் பாராட்டுவதாக நியூசிலாந்து ஹெரால்டு தெரிவித்துள்ளது.