விருதுநகர் மாவட்டத்தில் மணமகளுக்கு தாய்மாமன் நாய்க்குட்டியை சீதனமாக கொடுத்த சம்பவம் ஆச்சரியத்தை வரவழைத்துள்ளது.

ஒரு வீட்டில் பெண் குழந்தை பிறந்தால், அந்த குழந்தைக்கு பிறந்தநாள் முதல் திருமணம் வரை தாய்மாமன் சீர் என்ற பெயரில் பணமோ, நகையோ வழங்குவது வழக்கம்.

இந்த வழக்கத்தை காலங்காலமாக தமிழக மக்கள் கடைப்பிடித்து வருகிறார்கள். ஆனால், விருதுநகர் மாவட்டத்தில் தாய்மாமன் சீதனமாக கொடுக்கும் பொருட்களின் வரிசையில் நாய் ஒன்றை வழங்கியுள்ளார்.

நேற்று இராஜபாளையத்தில், கிருஷ்ணமூர்த்தி- சூர்யா ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் மணமகளின் மாமன் முறை கொண்ட விஜேஸ்குமார் என்பவர் "கன்னி " என்கிற வகையான நாய் ஒன்றையும், நாய்க்குட்டி ஒன்றையும் சீராக வழங்கியுள்ளார்.

இது குறித்து திருமணத்திற்கு வந்தவர்கள் கூறுகையில்,

அந்த காலத்தில் மணப்பெண்ணிற்கு நாய்களை சீராக கொடுப்பது வழக்கமாக வைத்து வந்தனர். ஆனால், இடைப்பட்ட காலத்தில் அதெல்லாம் மறைந்து விட்டது.

பெண்ணுகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாளிலிருந்து நாய்க்குட்டி ஒன்று புதிதாக வாங்கி அதை வளர்த்து பெண் திருமணமாகி தன் கணவருடன் செல்லும்போது தாய்மாமன் சீராக கொடுத்து அனுப்புவார்கள்.

நாய்கள் பெண் புகுந்த வீட்டிற்கு போகும்போது பாதுகாக்கும் என்ற நம்பிக்கை இருந்து வந்தது. நவீன காலத்தில் அது மறக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த கலாச்சாரத்திற்கு மறுபடியும் உயிர் வந்தது மகிழ்ச்சியை கொடுக்கிறது என்றனர்.

தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.