ஆயுள் காப்புறுதி பணத்தை பெற்றுக் கொள்வதற்காக மனைவியைக் கொலை செய்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரை பிடிகல காவல்துறையினர் நேற்றையதினம் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 24 வயதுடைய குறித்த நபர், தனது நண்பருக்கு 20 இலட்சம் ரூபா பணத்தையும், வாடகை வாகனம் ஒன்றையும் கொடுத்து, விபத்தை ஏற்படுத்தி அவரது மனைவியை கொலை செய்துள்ளார்.

காவல்துறையினரின் விசாரணைகளிலிருந்து குறித்த விடயங்கள் வெளிவந்துள்ளது.

கடந்த மாதம் ஏப்ரல் 30ஆம் திகதி எல்பிட்டிய, பிடிகல - மாபலகம பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவர் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தார்.

குறித்த விபத்தை ஏற்படுத்திய ஜீப் ரக வாகனம் சம்பவம் இடத்திலிருந்து தப்பிச்சென்றிருந்தது.

இந்த விடயம் தொடர்பில் எல்பிட்டிய பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண் ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரிபவர் எனவும், அந்த பெண் 4 நிறுவனங்களிடம் 50 இலட்சம் ரூபாவுக்கு ஆயுள் காப்பீடு எடுத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டுள்ள அவரது கணவர், மனைவியை கொலை செய்து, அதனை விபத்து என காப்புறுதி நிறுவனங்களிடம் உறுதிப்படுத்தி ஆயுள் காப்பீடுகளை பெறுவதற்கு திட்டமிட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள 24 வயதுடைய சந்தேக நபர் காலி பிரதேசத்தில் வசிக்கும் வேலையற்ற ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.