தமிழக அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை 59-இல் இருந்து 60ஆக உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சட்டசபையில் 110 விதியின் கீழ் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படடுள்ளது.
இதுகுறித்து முதல்வரின் அறிவிப்பில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், பணியிலிருந்து ஓய்வுபெறும் வயது, 58இல் இருந்து 59ஆக உயர்த்தி கடந்த ஆண்டு மே மாதம் எனது உத்தரவின் பேரில், அரசாணை வெளியிடப்பட்டது.
இந்நிலையில், அரசு பணியாளர்களின் ஓய்வுபெறும் வயது, தற்போது அமுலிலுள்ள 59 வயது என்பது, 60 வயதாக உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் இப்பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த உத்தரவு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசியலமைப்பு மற்றும் சட்ட ரீதியான அமைப்புகள், அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், ஆணையகங்கள், சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களுக்கும் பொருந்தும்.
இந்த உத்தரவு, தற்போது அரசு பணியில் இருக்கும் அனைவருக்கும் மற்றும் இவ்வாண்டு, 31.5.2021 அன்று பணியில் இருந்து ஓய்வுபெறும் பணியாளர்களுக்கும் பொருந்தும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 12 இலட்சம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களின் பணி ஓய்வுக்காலம் 58 வயதாக இருந்தது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் கேட்டுவரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வுபெறும் வயதையும் 60ஆக உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.