ஈரானில் சுமார் 2.5 கோடி மக்கள் கொரோனா வைரஸ் பெருந்தொற்று இலக்காகியிருப்பார்கள் எனஅந்நாட்டு ஜனாதிபதி ஹசன் ரௌஹானி தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் நாட்களில் 3.5 கோடி மக்கள் தொற்றால் பாதிக்கப்படக்கூடிய ஆபத்தில் இருப்பதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து ஹசன் ரௌஹானி தெரிவிக்கையில், “தற்போதைய நிலைவரப்படி நாட்டில் சுமார் 2.5 கோடி மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 14 ஆயிரம் மரணித்துள்ளனர்.

இந்நிலையில், சுமார் 3.5 கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படக்கூடிய பெரும் ஆபத்தில் உள்ளனர்” என்று கூறியுள்ளார்.

80 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட ஈரானில் தொடர்ந்து கொரோனா வைரஸ்  பரவல் தீவிரமடைந்து வருகின்றது. மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடாக ஈரான் உள்ளது.

அந்நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் இரண்டு இலட்சத்து 71 ஆயிரத்து 606 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், இதுவரை அங்கு 13 ஆயிரத்து 979 பேர் மரணித்துள்ளனர்.

இதேவேளை, இரண்டு இலட்சத்து 35 ஆயிரத்து 300 பேர் இதுவரை குணமடைந்துள்ளமை பதிவாகியுள்ளது.

ஈரானின் புனித நகரமான கூமிலில் கடந்த பெப்ரவரியில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட முதல் நபர் உறுதிசெய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து அங்கு தொடர்ந்து வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்றது.

தற்போதைய நிலையில் ஈரான் தலைநகரில் மட்டும் 20 சதவீதம் பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என ஈரானின் கொரோனா தடுப்புப் பணிக்குழுவின் தலைவர் அலிரேஸா சாலி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.